<xmp><body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6886596\x26blogName\x3d%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://santhoshguru.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://santhoshguru.blogspot.com/\x26vt\x3d7269813352951524605', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script></xmp>

கசாகூளம் - பெயர்க்காரணம்

Monday, September 19, 2005

ஆதவன் - பாகம் மூன்று
அகவுலக ஆய்வாளன் - பா. ராகவன்

எண்பதுகளின் இறுதியில், தொண்ணூறின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்து, தமிழ்ச் சிறுகதைத் துறையில் இன்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு சிறப்பானப் பங்களிப்பை வழங்கிவரும் எந்த ஓர் இளம் படைப்பாளியும் இரண்டு பேரின் தாக்கம் ஏற்படாமல் தாம் எழுத வரவில்லை என்று மனப்பூர்வமாகச் சொல்ல முடியாது. அந்த இருவர்: ஆதவன், சுப்ரமணிய ராஜூ.

இருவருமே மிக இளம் வயதில் நிறைய சாதித்தவர்கள். வேறுபாடில்லாமல் எல்லாத் தரப்பு மூத்த எழுத்தாளர்களாலும் அங்கீகரிக்கப்பட்டு, இருவருமே நம்ப முடியாத இளம் வயதில் இறந்துபோனவர்கள். இருவரது மரணமும் துர்மரணம்தான் என்பதும் சோகமான சரித்திரம். ஆதவன் ஆற்றில் அடித்துப் போகப்பட்டார், சுப்ரமணிய ராஜூ சாலை விபத்தில் மாண்டுபோனார்.

நகர்ப்புற, மத்தியதர இளைஞர்களின் மன உணர்வுகள்தாம் இந்த இரு படைப்பாளிகளின் சிந்தனையையும் இடைவிடாமல் பாதித்துக்கொண்டிருந்தன என்பதும் ஓர் எதிர்பாராத ஓற்றுமை. ஆதவனின் கதைகளில் தற்கால இளைஞர்களின் "கேரிகேசர்கள்' எப்படி தவிர்க்க முடியாமல் வந்து விழுந்துகொண்டிருந்தனவோ, அதேமாதிரி ஆதவன் பற்றிய இக்கட்டுரையில் சுப்ரமணிய ராஜூவை நினைவுகூர்வதும் தவிர்க்க முடியாமலே போவதும் ஒரு நிர்ப்பந்தமாகி விடுகிறது.

ஆதவன் தம் இளவயது முதலே தில்லியில் வாழ்ந்தவர். நேஷனல் புக் டிரஸ்டில் அதிகாரியாகப் பணியாற்றியவர். காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன், முதலில் இரவு வரும் போன்ற குறிப்பிடத்தகுந்த புத்தங்களைத் தந்தவர். தேர்ந்த எழுந்து கைவரப்பெற்ற அவர், தமிழ் தவிர இந்தி, ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர்.

இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதுவது என்று அவர் முடிவு செய்திருந்தால் தேசிய அளவில் இ உலக அளவில் கூடக் கொண்டாடப்படத்தக்க எல்லையைத் தொட்டிருக்கக்கூடும். இந்திரா பார்த்தசாரதி கூறுவது போல, தமிழில் எழுதுவது என்று அவர் முடிவெடுத்ததே, தம் வேர்களை அவர் வெட்டிக்கொள்ள விரும்பாததனால்தான்!

ஜானகிராமனின் நளினம், புதுமைப்பித்தனின் பாய்ச்சல், இந்திரா பார்த்தசாரதியின் புத்திசாலித்தனம், அசோகமித்திரனின் வடிவ அமைதி என ஆதவனின் எழுத்துக்கொரு இலக்கணம் புனைய முற்பட்டாலும் எந்தச் சட்டத்திலும் இரு விநாடிகள் கூடக் பொருந்தியிராமல் பிதுங்கி வெளிவந்துவிடும் அவரது கலை.

காரணம், பாத்திரங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்த தமிழ்ச் சிறுகதை உலகில் முதல் முதலில் பாத்திரங்களின் மனங்களை மட்டுமே பேசவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர் ஆதவன்.

அவரது கதையொன்றில் ஓர் இளைஞன் நினைப்பான், ""குருதத்தே தற்கொலை செய்துகொண்டாயிற்று. நான் ஏன் இளியும் உயிரோடு இருக்க வேண்டும்?''

சினிமாக் கதாநாயகர்களைக் கடவுள்களாகவே கொண்டாடும் ஒரு தேசத்தின் நாடித்துடிப்பே இந்த ஒரு வரியினுள் அடங்கியிருப்பதைச் சற்று உன்னிப்பாக அணுகுபவர்கள் கண்டுகொள்ள முடியும்.

ஆதவனின் மொத்தக் கதையுலகமே சோகமெனும் சல்லாத் துணியால் போர்த்தப்பட்டிருப்பது போல் தெரிவது, அறிமுக வாசகனுக்கு முதலில் இலேசான சங்கடமேற்படுத்தக் கூடியது. வீடு வீடாகப் படியேறி கொலுவுக்கு அழைக்கிற பெண்ணைப் போல, ஒரே ஒரு பாத்திரமே அவரது எல்லாக் கதைகளினுள்ளும் புகுந்து மீள்வது போன்ற தோற்றம் அல்லது பிரமை கூட உண்டாவது சாத்தியந்தான். நகர்புற இளைஞர்களின் வாழ்வெனும் திரைக் கதைகளுக்குள் அதிக வேறுபாடில்லை என்பதே இதன் காரணம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கழிப்பது என்கிற சாதாரண விஷயம் அந்த நாகராஜூக்கு (ஞாயிற்றுக் கிழமையும் அறையிலோர் இளைஞனும்) எப்படியொரு பூதாகாரமான பிரச்சினையாகிறதோ, அதே விதத்தில்தான் ஆதவனின் இன்னொரு கதையில் (இறந்தவன்) வரும் "அவனு'க்குத் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்துவதா, வேண்டாமா என்பதும் கறையான், புத்தகத்தை அரிப்பதுபோல் மனத்தை அரித்து துவம்சம் செய்கிறது.

ஒரு கட்டத்தில் சலிப்புற்று அந்த "அவள்' நினைப்பாள்: "Why dont you say you want this, you want that...say you want me."

செயல்களுக்கு உள்ளது போல சிந்தனைக்கு வரம்பில்லாததுதான் எத்தனை பூரிப்பேற்படுத்தும் விஷயமாகிறது.

ஆதவனின் கதைகளை வாசிக்கிற போது இடைவிடாமல் யாரோ பேசிக் கொண்டே இருத்தல் போலவும் பேச்சென்கிற தொடர்புகொள்ளும் வழிமுறையே வழக்கொழிந்து, பேரண்டம் முழுதும் சூனியம் வியாபித்து விட்டது போன்றும் இருவித உணர்வுப் புயல் வாசகனை ஒருசேரத் தாக்கும்.

இந்த அசாத்தியமான மனமொழிக்கு கையாளல் உத்தியை அவர் விடாப் பிடியாகத் தம் அத்னை கதைகளிலும் கையாண்டு வந்திருக்கிறார். கிழவனின் மனம், திருமணமாகாதவர்களின்/ ஆனவர்களின் மனங்கள், பெண்களின் மனம் / உள் மனம், தாயின் மனம், அதிகாரிகளின் மனம், சேவகர்களின் மனம், வேலையில்லாதவர்களின் மனம், வேலையை விரும்பாதவர்களின் மனம், இவைதான் ஆதவன் சுரங்கம் தோண்டிப் பார்க்கத் தேர்ந்தெடுத்த தளங்கள்.

இந்த பயிற்சியில் ஏற்படும் இறைச்சலை ஒரு லேத் மிஷின் இயங்குவதுடன் ஒப்பிடலாம்.

ஓடத் தொடங்கும் போதான சகிக்க இயலாத இறைச்சல்; பிறகு இரைச்சலே இசையானப் பின் மௌனமாகவும் ஆகிவிடுகிற பேரமைதி.

ஆனால் இந்தச் சூட்சுமங்களின் இலக்கணத்தை ஆதவன் முன்வரையறுத்துக் கொள்வதில்லை. ஒரு விளையாட்டுப் போல இ நெட் பிராக்டிஸாக மட்டும் இ ஒவ்வொரு கதையிலும் இந்த மனமொழியை வேறு வேறு வடிவங்களில் கையாண்டு பார்கிறார். தாம் எழுதுவதை அவரே ஒரு விளையாட்டு என்றுதான் குறிப்பிடவும் செய்கிறார்.

ஆனால் இலக்கியம் என்பதோ படைப்பென்பதோ விளையாட்டல்ல என்பதையும் அவர் அறிந்திருந்தார். அல்லாத பட்சத்தில் ஒரு மயிர்கூட நரைக்கத் தொடங்காத ஒரு முன்னிளமைப் பருவத்தில் ஒரு கிழவனாரின் மனத்தில் புகுந்துகொண்டு அவரால் கதை சொல்லியிருக்க முடியாது (ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்).

தன் "நானை' அடையாளம் காணுவதற்காக எழுதுவதாகக் கூறிய ஆதவனின் எல்லாக் கதைகளிலும் ஏராளமான நான்கள் உலவுவதைக் காண்பதும், அவற்றில் எது ஆதவனின் நிஜமான நான் எனத் தேடுவதும் கூர்மையான இலக்கியப் பயிற்சியை மேற்கொள்ள விரும்புவோருக்கு ஒரு நல்ல விளையாட்டாயிருக்கும்.

வாழ்நாள் முழுவதும் பிறர்பால் அன்பு செலுத்தி, எல்லோருக்கும் எந்த வதித்திலாவது உதவி, எல்லார் மனங்களிலும் இனிய உருவமாக இடம் பெற்றவர் என்கிற பொருளில் ஆதவன் பற்றி அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஒரு குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டே ஆதவன் தேடிய அந்த "நானை' அவர் கதைகளில் கண்டுபிடித்து விட முடியும்; சுலபமுங்கூட.

காரணம், அவரது எழுத்து முகங்களைப் பற்றியதல்ல; அகங்களைப் பற்றியது.ஆதவன் வீட்டுக்குச் சென்று வந்தேன் - ஆர்.வெங்கடேஷ்

அவரது குரலில் தொனித்த வாத்ஸல்யமும் கரிசனமும் என்னை கட்டிப்போட்டுவிட்டன. அதுநாள் வரை அவர் எப்படிப்பட்டவரோ, பேசுவாரோ மாட்டாரோ என்றெல்லாம் விரிந்த கற்பனைகள் அத்தனையும் நொறுங்கிப்போக, "வீட்டுக்கு வாங்கோளேன்" என்று தொலைபேசியில் அழைத்தபோது, அடுத்த நிமிடம் நான் பெங்களூரில் இருக்க மாட்டோமா என்ற பரபரப்பு என் உடம்பெங்கும் தொற்றிக்கொண்டது. நினைவில் நிற்கும் பல பெண் பாத்திரங்களைப் படைத்த அற்புத எழுத்தாளனின் வாழ்வில் கலந்த பெண் அவர். சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொண்ட பெண் அவர்.


திருமதி ஹேமா சுந்தரம் - ஆதவன் சுந்தரத்தின் மனைவி.

அடுத்து வந்த வெள்ளிக்கிழமை இரவு பெங்களூர் ரயில் பிடித்து சனிக்கிழமை காலை போய் இறங்கினேன். பெங்களூரில் இருக்கும் நண்பர் என்.சொக்கனிடம் ஏற்கனவே சொல்லிவைத்திருந்தேன். ஒன்பது ஒன்பரை மணிவாக்கில் இருவரும் ஆதவன் வீட்டுக்குக் கிளம்பினோம். மீண்டும் ஒருமுறை தொலைபேசியில் அழைத்து, நாங்கள் வருவதைத் தெரிவித்துக்கொண்டோம். ஒரு ஆட்டோ பிடித்து உட்கார்ந்துகொண்டோம்.

சொக்கனுக்கு என் ஆதவன் ப்ரியம் ஏற்கனவே தெரியும். அவர்தான் "காகித மலர்கள்" புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தந்தவர். ஆட்டோவில் ஆதவனைப் பற்றியும், அவர் புத்தகங்களைத் தேடி தேடி நான் சேகரிக்கும் விதம் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தேன். முக்கியமாக அசோகமித்திரன் தன் சேகரிப்பில் இருந்து ஒவ்வொரு புத்தகமாகத் தேடி எடுத்துக் கொடுத்தது என் மனத்தில் என்றும் மறையாத ஒன்று. ஆதவனின் அனைத்துப் புத்தகங்களையும் மீண்டும் மறுபதிப்பு கொண்டு வரவேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு உரமிட்டவர் அசோகமித்திரன்.

மற்றொரு ஆதவன் ப்ரியர் பால்நிலவன். அவரது சேகரிப்பில் இருந்தே நான் "பெண், தோழி, தலைவி" என்ற தினமணிக் கதிர் குறுநாவலைப் பெற்றுக்கொண்டேன். 1982ல் வெளியான மாதநாவல் அது. மிகப் பத்திரமாகப் பொத்தி பொத்திக் காத்து வைத்திருந்தார் பால்நிலவன். கேட்டவுடன் மனம் நிறைந்து கொடுத்தார்.

ஆதவனைப் பற்றிய பல ஆச்சரியங்கள் எனக்கு உண்டு. அதில் ஒன்று, குழந்தைகளுக்கு அவர் எழுதியுள்ள கதைகள். மிக மிக முதிர்ச்சியுடன், நவீன வாழ்வில் மத்திய தர மனிதர்களைப் பற்றி எழுதிய ஒருவரால், சிறுவர்களுக்குக் கதை எழுத முடியுமா என்ற சந்தேகத்தை பொய்யாக்கியவர் ஆதவன். "சிங்க ராஜகுமாரி" என்ற குழந்தைகள் கதைத் தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். வானதி வெளியீடு. அசோகமித்திரன் சேகரிப்பில் இருந்து இந்தத் தொகுதியைப் பெற்றுக்கொண்டேன். அத்துடன், மதுரம் பூதலிங்கம் (வாசவேஸ்வரம் 'கிருத்திகா') எழுதிய பாலர் ராமாயணம் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆதவன் சுந்தரம். மிக மிக எளிமையாக, குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் அவர் செய்துள்ள மொழிபெயர்ப்பு என்னைக் கவர்ந்ததென்றால், மற்றொரு புறம் சிங்க ராஜகுமாரி தொகுதி பெரிய ஆச்சரியத்தைத் தக்க வைத்துக்கொண்டிருந்தது. எளிமையான கதைக் கருக்கள். அழகான நடை. தமிழ் தெரிந்த பத்து வயதுக் குழந்தையால் தாராளமாகப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவு சீரான ஓட்டம்.

அப்புறம் தான் தெரிந்துகொண்டேன், அவர் தமது எழுத்துப் பணியை "கண்ணன்" சிறுவர் இதழிலேயே தொடங்கியவர் என்று. லெமன் (மஞ்சரி ஆசிரியராக இருந்தவர் - லட்சுமணன்), ரமணீயன், அம்பை எல்லாரும் அவரோடு கண்ணனில் எழுதி வெளியே வந்தவர்கள்தான்.

ஆட்டோ லிங்கராஜபுரத்தை அடைந்திருந்தது. இரண்டு மூன்று இடங்களில் நிறுத்தி நிறுத்தி, முகவரியை விசாரித்துக்கொண்டோம். ஒரு சின்ன பாலத்தினடியில் போய், வலது புறம் திரும்பி, நேரே ரயில்வே லைனை ஒட்டி ஆட்டோ ஓடியது. "பத்மாலயா" என்ற வீடு கண்ணில் பட்டபோது, ஒருசில நொடிகள் நான் நெகிழ்ந்துபோனேன். பழைய கால வீடு.

சின்ன கேட். எதிர்புறம் சென்னை போகும் ரயிலின் பாதை தெரிந்தது. கேட்டைத் திறந்தால் இரண்டு புறமும் பூஞ்செடிகள். மணியடித்துக் காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனமெங்கும் ஆனந்தம். இது ஆதவன் வீடு. இங்கே நடத்திருப்பார். இங்கே உட்கார்ந்துகொண்டிருப்பார். குரலும் வாசனையும் வளைய வந்த இடங்கள் இவை.

என்னை அறியாமல் அவர் நான் காண, ஏதோ ஒன்றை மிச்சம் வைத்து விட்டுப் போயிருப்பார் என்று தோன்றியது. அபத்தமாகக் கூட இருக்கலாம். ஆனால், நம்பிக்கை இருந்தது.

****

"1976ல் கல்யாணம் ஆச்சு. பேப்பர்ல விளம்பரம் குடுத்து, அதுல பார்த்து தேர்ந்தெடுத்து வந்து பொண்ணு பார்த்தார். இந்த பெங்களூர் வீட்டுலதான் பொண்ணு பார்ததார். வீட்டுக்கு வந்தபோது, இங்க இருக்கற இங்கிலீஷ் புக்ஸ், பேப்பர்களெல்லாம் பார்த்திருப்பார் போலயிருக்கு. என்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேட்டார். "உனக்குத் தமிழ் தெரியுமா?"ன்னு கேட்டார். தெரியும்னு சொன்னேன்.

அவ்வளவுதான் பேசினோம். அப்புறம் கல்யாணம் ஆச்சு. கல்யாணத்தும்போதுதான், என் ரிலேடிவ் பையன் ஒருத்தன் கணேசன்னு சொல்லிட்டு, அவர அடையாளம் கண்டுகிட்டு, அவர்கிட்டபோய், நீங்கதானே ஆதவன், தீபத்துல கதையெல்லாம் எழுதறீங்களேன்னு கேட்டான். அப்பத்தான் எங்களுக்கு அவர் ஒரு ரைட்டர்னே தெரிஞ்சுது. அதுவரைக்கும் எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.

அடுத்தநாளே, கணேசன், தீபத்துல வந்த காகித மலர்கள் தொடரைக் கட் பண்ணி பைண்ட் பண்ணிக் கொண்டு வந்துகொடுத்தான். அவரும் உடனே அவன் வீட்டுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிண்டிருந்தார். அப்படி ஒரு எளிமை. தான் யாரு என்னன்னு கூட சொல்லிக்க மாட்டார்.

அவரோட அம்மா சொல்லுவா, எனக்கு இப்படி ஒரு பையன் இருக்கான்னு அக்கம்பக்கத்துல இருக்கறவாளுக்குக் கூட தெரியாது. அப்படி ஒரு சைலண்ட். எப்ப பார்த்தாலும் படிச்சுண்டே இருப்பார். அவர் மட்டுமல்ல, அவரோட அப்பா, அக்கா, தம்பி, தங்கை எல்லாரும் ஏதாவது படிச்சுண்டே இருப்பா. சாப்பிடும்போது கூட கையில ஒரு புக்கு இருக்கும்.

அவரோட அப்பா, பெரிய சம்ஸ்கிருத ஸ்காலர். டில்லியில படிச்சதால, இந்திதான் ஸ்கூல்ல படிச்சது. பின்னால, தமிழ் ஆர்வத்துல தமிழ் புக்கெல்லாம் படிக்க ஆரம்பிச்சார். அப்போதெல்லாம், மெட்ராஸ் போயிட்டு, தில்லி வந்தாரானால், இரண்டு கையிலும் புத்தகக் கட்டுதான் இருக்கும். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வருவார். "யாராவது ஸ்டேஷனுக்கு வந்து ஹெல்ப் பண்ணக்கூடாதோ"ன்னு கேப்பார்.

படிக்கறதுல அப்படி ஒரு ஆசை. வீட்டுல ஐஞ்சாறு டிக்ஷ்னரிகள் இருக்கும். காலையில குளிச்சுட்டு, தலைய துவைட்டிக்கிட்டே, ஓடிவந்து டிக்ஷ்னரிய திறந்து என்னவோ வார்த்தைகளைப் பார்த்துண்டிருப்பேர். இரண்டு மூன்று டிக்ஷ்னரிகளை மாத்தி மாத்தி பார்ப்பேர்.

அதிர்ந்து பேசவே தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க ஊட்டிக்குப் போனோம். அங்க படிப்படியா இருக்கற மலையையும் இயற்கையையும் பார்த்துட்டு, "இதெல்லாம் பார்த்துக்கோ, சீக்கிரம் இதெல்லாம் என் எழுத்துல வரும்"னு சொன்னார்.

அவர் அதிகமும் என்ன கூட்டிக்கிட்டு போனது எழுத்தாளர்கள் வீட்டுக்குத்தான். அங்கையும் அதிகம் பேசமாட்டார். இ.பா மேலயும் அசோகமித்திரன் மேலயும் ரொம்ப அபிமானம். இங்க பெங்களூர்ல இருந்தபோது, அடிக்கடி சரஸ்வதி ராம்நாத் மாமியப் பார்க்கப் போயிடுவார்.

எழுத்து மேல ரொம்ப ஆசை. இப்படித்தான் இருக்கணும், அப்படித்தான் இருக்கணும்னு ஏதும் அவசியமில்லை. எங்கவெண்ணா உட்கார்ந்துண்டு எழுதுவார். மடியில ஒரு சூட்கேஸை… வைத்துக்கொண்டு எழுதிக்கொண்டே இருப்பார். மணி மணியா இருக்கும் எழுத்து. சில சமயங்கள்ல, போஸ்டாபீஸ் போய் கடைசி வரிகளையெல்லாம் எழுதி, போஸ்ட் பண்ணிட்டு, ஆபிஸ் போவார்.

முதல்ல ரயில்வே வேலையா இருந்தார். ஏழு வருஷம். அப்பறம் 1975லதான் நேஷ்னல் புக் டிரஸ்ட், தமிழ் பிரிவுக்கு அசிஸ்டெண்ட் எடிட்டர் வந்தார். 1984 வரைக்கும் தில்லியில இருந்தோம். அப்புறம், அவருக்கு பெங்களூருக்கு போஸ்டிங்க ஆச்சு. இங்க வந்தோம்.

என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடியே, அவர் காகித மலர்கள் எழுதிட்டார். அதை ஒரு தபசு மாதிரி பண்ணினேன்னு சொல்வார். தில்லியில வெளிய போகும்போது, அவர் உட்கார்ந்துண்டிருந்த காபி பார், ரெஸ்டாரெண்ட் எல்லாம் காண்பிப்பார்.

பத்திரிகைகள்லேருந்து கதை கேட்டாதான், கதை எழுதுவார். கதை எழுதிட்டு, என் கிட்ட படிக்கக் குடுப்பார். "எனக்கென்ன, இதெல்லாம் புரியப்போறது"னு சொன்னா, "ஐயோ, எல்லாருக்கும் புரியணும்னுதான் கதை எழுதுறேன். உனக்கும் புரியணும். படிம்"பார்.

இங்க பெங்களூர் வந்த பின்னால, பாரதியாரை படிச்சுண்டே இருப்பார். அதுக்குள்ளேயே "புழுதியில் வீணை" எழுதிட்டார். 39 வயசுக்குள்ள என்னமா எழுதியிருக்கான். சாதிச்சுருக்கான்னு பாரதியார் மேல ரொம்ப ஆச்சரியப்படுவார். அந்த நாடகத்தை எப்படி மேடையேத்தணும்னு பெரிய கனவே இருந்தது அவருக்கு. அந்த நாடகத்தைப் படிச்சாவே தெரியும். நிறைய குறிப்புகள் எழுதியிருப்பார். அதுல தீ, தீ, தீ ன்னு வர வரிகள் எப்படி சொல்லப்படணும்னெல்லாம், அவரே சொல்லச்சொல்லி, கேசட்டுல பதிவு பண்ணி வெச்சிருக்கார்.

தமிழ் மாதிரியே இங்கிலீஷ்லயும் அவருக்கு அபார திறமை உண்டு. எம்.எஸ்.ராமஸ்வாமி அவரோட சிறுகதை ஒன்றை மொழிபெயர்க்கறேன்னு சொல்லி கேட்டார். அப்புறம், பின்னால, சாகித்ய அகாதமியோட ஒரு புக்குல, ஆதவனே மொழிபெயர்த்த ஒரு கதையைப் படிச்சுட்டு, நிச்சயமா என்னால இது மாதிரி முடியவே முடியாதுன்னு சொல்லி லெட்டர் போட்டுட்டார்.

மேடையில பேசும்போது ரொம்ப நிதானமா பேசுவார். தான் சொல்லற வார்த்தை சரியான வார்த்தையான்னு யோசித்து யோசித்து பேசுவார். அவர் வார்த்தைகளை கோர்க்கறார்ங்கறது அவரோட முகத்தைப் பார்த்தாவே தெரியும். ஆனால், எழுத்துல அப்படி இல்ல. எழுதித் தள்ளிண்டே இருப்பார். நல்ல ஸ்பீட்."

*****

விசாலமான கூடம். எதிர் எதிர் பக்கங்களாய்க் கொண்ட இரண்டு, மூன்று சீட் சோபாக்கள். நடுவே ஒரு டீப்பாய். வலப்பக்கம் தலைக்குமேல் ஷோக்கேஸ். இடதுபக்கம் ஒரு அறை. நேர் எதிரே ஒரு அறை. எதிர் அறையை ஒட்டி வலப்பக்கம் சமையலறை. இடப்பக்கம் குளியலறை போகும் பாதை. வெள்ளையடிக்கப்படாத வீடு. மிதமான இருட்டும் மெளனமும் அந்த வீடு முழுவதும் நிறைந்திருந்தது. ஆதவனைத் தம்முள் பொத்தி வைத்திருக்கும் மெளனம்.

எதிரே சாருமதி. ஆதவனின் மூத்த மகள். நல்ல உசரம். மெளனம். ஆதவனை அப்படியே உரித்து வைத்திருந்தார். பக்கத்தில் அவரது அம்மா திருமதி ஹேமா. பக்கத்தில் அவரது அம்மா. ஆதவனின் மாமியார். திருநீறு துலங்கும் வெள்ளை வெளேர் மாமி.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் இனிய கணவன், அன்புள்ள அப்பா, பொறுப்பான மாப்பிள்ளை, அதற்குமேல் கெளரவமான எழுத்தாளர் என்ற பெருமை அவர்கள் பேச்சு முழுவதும். ஆதவனின் எழுத்துக்களை படித்து, அதன் மேல் கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதை விட, அவரின் ஆளுமை சார்ந்து விசுவாசம் கொண்ட குடும்பம் அது.

சாருமதி தான் சிறுவயதில் எழுதி, கோகுலம் ஆங்கிலம் இதழில் வெளியான கவிதையைக் கொண்டுவந்து காண்பித்தார். முழுப்பக்கம் நீண்டிருக்கும் அழகிய கவிதை. கீழே சாருமதி சுந்தரம் என்ற பெயர் கெட்டி எழுத்தில். அப்பா தமிழ் சொல்லிக்கொடுத்தது, லெமனின் கவிதையைப் படிக்கச் சொல்லிக்கொடுத்தது என்று அனைத்தையும் தன் நினைவில் இருந்து நீவி நீவி எடுத்துத் தந்தார் சாருமதி.

ஆதவன் மறையும் போது, சாருமதிக்கு ஒன்பது வயது. இன்று கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு, வேலைக்குக் காத்திருக்கிறார். இரண்டாவது மகள், நீரஜா. வாசல் கதவைத் திறந்து எங்களை வரவேற்றது நீரஜாதான். கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு. "அறிவுக் களை ததும்பும் முகம்" என்று கதைகளில் படித்திருக்கிறேன். சாருமதி, நீரஜாவைப் பார்த்தபின், அந்த சொற்றொடரின் அர்த்தத்தை அன்றுதான் நேரில் உணர்ந்துகொண்டேன்.

திருமதி ஹேமா சுந்தரத்தைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கச்சலான தேகம். ஆனால், பாறைபோல் உறுதி, மனசுக்குள். இல்லையென்றால், இன்று இவ்வளவு தூரம் பெண்களை வளர்த்து முன்னேற்றியிருக்க முடியுமா?

*****

"அவர் போனதை என்னால நம்பவே முடியல... அவரோடு ·பிரெண்டோட சிருங்கேரி போய்ட்டு வரேன்னு கிளம்பினேர். அவருக்கு பெங்களூர் அவ்வளவா பிடிக்கல. அவருக்கு தில்லிதான் பிடிச்ச ஊர். இங்கே கொண்டு வந்து போஸ்டிங் போட்டுட்டாளேன்னு அவருக்கு வருத்தம்தான்.

ஆனாலும், வேலை பார்த்துண்டுதான் இருந்தார். நடுவுல வேற ஒரு டிவிஷனுக்கு மாத்தினாளோ என்னவோ? சரியா ஞாபகம் இல்ல. எழுதறவனைப் போய் வேறெதோவெல்லாம் பண்ணச் சொல்றாளேன்னு அவருக்கு வருத்தம். அவரை அட்மினிஸ்ட்ரேஷன் எல்லாம் பார்த்துக்கொள்ளச் சொன்னான்னு ஞாபகம்.

மூனாவது நாள்தான் பாடி கெடைச்சுது. பார்க்கவே முடியல... உடம்பெல்லாம் ஊதிப் போய்...

அப்பறம், எனக்கென்ன பண்றதுன்னு தெரியல.. நான் சின்னப் பொண்ணு. அவர் போயாச்சு. சின்னச் சின்னதா ரெண்டு கொழந்தைகள். அவர் இருந்தவரை நான் எதிலேயும் போனது கிடையாது. எடுத்து செஞ்சது கிடையாது.

என்ன பண்றதுன்னு தெரியல... யார கேக்கறது, என்ன செய்யணும்னு தெரியல... எங்கப்பாதான் எல்லாம் முன்ன நின்னு செஞ்சார்.

குழந்தைகள் வேற இருக்கே. காப்பாத்தியாகணுமே.. படிக்க வெக்கணுமே... முன்னேத்தியாகணுமே.. நல்ல வேளையா நேஷ்னல் புக் டிரஸ்டிலேயே வேலை கொடுத்தா...

அப்புறம் இருபது வருஷம் நான் தலைநிமிர்ந்தே பார்க்கல. அவரோடு புக்ஸ், கட்டுரைகள், எழுதி மிச்சவெச்சது எல்லாம் அப்படியே டெல்லியிலேயே போட்டுட்டு வந்துட்டோம். அவரோட தம்பி வைத்யநாதன்தான் எடுத்து வெச்சிருந்தார்.

குழந்தைகளை வளர்க்கறது மட்டும்தான் என் கடமைன்னு நான் கண்ண மூடிண்டு வேலை பார்த்தேன். கார்த்தால போனா ராத்திரி தான் ஆத்துக்கு வரமுடியும். வெளிய எங்கையும் போனதில்ல. ஒரு சினிமாவோ, டிராமாவோ எதுவும் யோசிச்சதில்ல..

அவர் புக்ஸைப் படிச்சவா யாராவது லெட்டர் போடுவா.. அப்படியே எடுத்து வெச்சுப்பேன். பதில் கூடப் போட முடிந்ததில்ல. வருஷம் ஆக ஆக, பலரும் அவர் எவ்வளவு முக்கியமான ரைட்டர்னு வந்து சொல்லுவா... கேக்கும்போதே கண்ணுல ஜலம் கண்டிண்டும். கேக்கறதுக்கு அவர் இல்லாம போய்ட்டாரேன்னு அடிச்சுக்கும்.

என்னோட அப்பா இருந்தவரைக்கும் கொஞ்சம் தெம்பா இருந்தது. பல வேலைகளை அவர் பார்த்துண்டார். அவர் போனப்புறம், எல்லாத்தையும் நானே பார்த்துக்கவேண்டியதாயிடுத்து. அம்மாவுக்கும் வயசாயிடுத்து. இவா ரெண்டு பேரும் வளர்ந்துட்டா.. அதுவே எனக்குப் பெரிய சந்தோஷம்..."

*****

சாருமதி, சில பழைய புகைப்படங்களைக் கொண்டு வந்து காண்பித்தார். மடியில் குழந்தையை (சாருமதியை) வைத்துக்கொண்டிருக்கும் ஆதவன். ஒரு சில குருப் போட்டோக்கள். அப்புறம், ஆதவனின் கல்யாண ஆல்பம் இருப்பதாகச் சொன்னார், அவரது மாமியார். சில கணங்கள் தயங்கினார் திருமதி ஹேமா சுந்தரம்.

சில நிமிடங்களில் அடுத்த அறையில் இருந்து சாருமதி அந்த ஆல்பத்தைக் கொண்டுவர, உள்ளே திருமதி ஹேமா சுந்தரம் மனம் கசிவது தெரிந்து. கேட்டிருக்கக்கூடாது, தவறு செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி சட்டென மேலெழுந்து என்னை இம்சித்தது. அனாவசியமாக, பழைய துக்கங்களை கிளறிவிடுகிறோம் என்ற எண்ணமே என்னை மேலும் வருத்தத்துள்ளாக்கியது. என்ன செய்வது என்று தெரியவில்லை. திருமதி ஹேமா சுந்தரம் கண்ணைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள். ஒல்லியாய், கெட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு, பஞ்சகச்சத்தில் ஆதவன். மாப்பிள்ளை அழைப்பு, பின், காசி யாத்திரை, ஊஞ்சல், நலுங்கு, பிடிசுற்றிப் போடுதல், பின் திருமாங்கல்யம் முடிதல், மெட்டி அணிவித்தல் என்று அத்தனையிலும் மெளன ஆதவன். அதே கூச்சம். அதே ஒடுக்கம். அதே உறங்கும் கண்கள்.

எனக்குச் சொந்தத்தில் அண்ணன் கிடையாது. எனக்கு அண்ணா என்று யாராவது இருந்திருந்தால், அது ஆதவன் போல் இருக்கவேண்டும் என்று பல நாள்கள் கனவு கண்டிருக்கிறேன். நான் விரும்பும் அதே குணாதிசயங்களோடு, ஆதவன் கருப்பு வெள்ளையில் காட்சி தந்துகொண்டிருந்தார். ஒரு தென்னை மரத்தின் கீழ் குழந்தையைத் தோளில் ஏந்தியபடி. முதிர்ச்சியும் கனிவும் பொலிந்த முகம்.

மீண்டும் ஒரு முறை காபி வந்தது. அன்று அங்கேயே சாப்பிடும்படி திருமதி ஹேமா சுந்தரம் வற்புறுத்த, முடியாதவர்களாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டோம். அன்று மாலையே நான் சென்னை திரும்பவேண்டிய அவசரம் இருந்ததால், மெல்ல கிளம்ப ஆயத்தமானோம்.

*****

"நிறைய பேர் வந்து அவரோட புக்ஸையெல்லாம் ரிப்ரிண்ட் போட கேக்கறா.. அப்பா இருந்தவரைக்கு, அவர்தான் இதையெல்லாம் பார்த்துப்பார். அவர் போனப்புறம், என்னக் கேக்கறா.. எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு. பல புக்ஸ் இப்ப படிக்கறவாளுக்கு கிடைச்சா எவ்வளவு நன்னா இருக்கும்னு நினைச்சுப்பேன்.

இன்னிக்கு புக்கெல்லாம் எவ்வளவு விலை போடறா.. பார்க்கும்போதே பயமா இருக்கு. அவர் காலத்துலலேயே, அதிக வெலை புக்கெல்லாம் பார்த்து, எப்படி வாங்கிப் படிப்பா, இப்படி வெல வெச்சுருக்கே அப்படிம்பார். கொண்டு வரணும், கொறைச்ச வெலைல.. எல்லாரும் படிக்கறா மாதிரி.."

*****

கிளம்பும்போது, ஆதவனின் மாமியார், தட்டில், மட்டை தேங்காயை வைத்து நின்றுகொண்டிருந்தார். சாந்தமான முகம். அற்புத மாப்பிள்ளையைப் பெற்ற ஆனந்தம். அதைவிட அவர் புகழை இன்று தமிழ் உலகம் புரிந்துகொண்டிருப்பது கண்டு ஆனந்தப்படும் நெஞ்சம்.

"ஆத்து மரத்துல காய்ச்ச தேங்கா இது.." என்றார்.

தட்டைக் கொடுக்க வந்தவரை, கிழக்கே பார்த்து நிற்கச் சொன்னேன். பக்கத்தில் திருமதி ஹேமா சுந்தரத்தையும் நிற்கச் சொன்னேன். நான் யார் கால்களிலும் விழுபவனல்ல. அன்று விழுந்து வணங்கவேண்டும்போல் தோன்றியது. என் வழக்கப்படி நான்கு முறை சேவித்தெழுந்தேன். கண்கள் கலங்குவதை, என்னாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அன்பு மயமான ஆதவன்... - திருப்பூர் கிருஷ்ணன்

ஆதவன் துங்கபத்திரை நதிச் சுழலில் சிக்கிக் காலமான செய்தி வானொலியில் அறிவிக்கப்பட்டது. ஆழ்ந்த இலக்கியவாதிகள் பலரையும் அதிர்ச்சியிலும் கடும் சோகத்திலும் ஆழ்த்திய செய்தி. என் இனிய நண்பரும் எழுத்தாளருமான பால்நிலவன், அந்த வானொலிச் செய்தியைக் கேட்டு, அளவற்ற சோகத்தால் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தார். நா.பா.வை அந்தச் செய்தி மனமுடையச் செய்தது. ஆதவனைத் தம் தம்பி போலக் கருதி அன்பு செலுத்தியவர் அவர். ஆதவனின் மேல் மிகுந்த நட்புக்கொண்டிருந்தவரான இந்திரா பார்த்தசாரதி துயரவசப்பட்டார். எனக்கு உலகம் வெறுத்தது. ஆதவனே போய்விட்டாரே. இனி என்ன? அகால மரணம். அதிலும் விபத்து. அவரும் நானும் கொண்டிருந்த நட்பு ஒரு துளிப் பொறாமைக் களங்கமோ, சொந்த ஆதாயப் பின்னணிகளோ சிறிதும் கலவாத, ஆத்மார்த்தமான, அன்புமயமான நட்பு. எந்தச் சோகமானாலும் பகிர்ந்துகொள்ளக்கூடிய உற்ற நண்பர்களையே நாம் இழக்க நேர்கிற சோகம்தான் எத்தனை கொடுமையானது!

காலமான ஓரிரு நாட்களில் அம்பத்தூரிலிருந்து லா.ச.ரா. என்னைத் தேடி வந்தார். விபத்தில் மரணமடைந்த செய்தியை நானும் அவரும் பகிர்ந்துகொண்டோம். சற்று நேரம் மௌனமாக இருந்தார் லா.ச.ரா. என் மேசைமேல் ஜே.கிருஷ்ணமூர்த்தி படம் ஒன்று வைத்திருந்தேன். அந்தப் படத்தை விரலால் தட்டியவாறே சொன்னார்: "அவனும் அழகனய்யா!"

ஆமாம். அழகான எழுத்தாளர்கள் என்று நா.பா. தொடங்கிச் சிலரைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் கட்டாயம் இடம்பெறக் கூடியவர் ஆதவன். அழகானவர் மட்டுமல்ல. அழகாகவும் சீராகவும் உடையணிபவரும் கூட. மடிப்புக் கலையாமல் இஸ்திரி போடப்பட்ட பான்ட். அதன் நிறத்திற்குப் பொருத்தமான வண்ணத்தில் சட்டை. சட்டையை "இன்" செய்திருப்பார். பளபளவென்று பாலீஷ் போடப்பட்டு மினுமினுக்கும் ஷ¥க்கள். அவரைக் கழுத்தில் கட்டிய டையோடும் நிறையப் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்க்கும் போது ஆசிரியர், பெற்றோர் கட்டளைக்கு அடங்கி ஒழுங்காக டிரஸ் செய்துகொள்ளும் கான்வென்ட் பையன் ஞாபகம் வரும். தலையைச் சீராக குழப்பமின்றி வாரியிருப்பார்.

ஆதர்ஸ் கில்ட் கூட்டங்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வந்தன. ஒரு வருடம் தில்லியில். மறு வருடம் வேறு ஏதாவது ஒரு நகரத்தில். எனவே ஆதர்ஸ் கில்டில் உறுப்பினராக இருந்த நான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லி போக நேர்ந்தது. தில்லி போன போதெல்லாம் இந்திரா பார்த்தசாரதி, கே. ஸ்ரீனிவாசன், கஸ்தூரிரங்கன், என்.எஸ்.ஜெகந்நாதன், கிருத்திகா, தில்லி ராஜாமணி, தம்பி சீனிவாசன், வாஸந்தி என்று தில்லிவாழ் எழுத்தாளர்கள் பலரையும் சந்தித்து மகிழக்கூடிய வாய்ப்புகள் நிறையக் கிடைத்தன.

தவறாமல் ஆதர்ஸ் கில்ட் கூட்டங்களுக்கு வந்துசொண்டிருந்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் நீல பத்மநாபன். நான், நீல பத்மநாபன், வெங்கட் சாமிநான், தம்பி சீனிவாசன், ஆதவன் எல்லோருமாகப் புல்வெளியில் அமர்ந்து ஒரு முறை நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வருகிறது. ஏதோ காராசாரமான இலக்கியப் பரிவர்த்தனை. அப்போது கூட சமநிலை குலையாமல் மௌனம் காத்தார் ஆதவன்.

அது தான் ஆதவன். அவர் அமைதியிழந்து கத்தி கூச்சலிட்டு நான் பார்த்ததே இல்லை. நிதானம், பொறுமை, இணக்கம், அனுசரணை போன்ற உயர்ந்த குணங்கள் அவரிடம் இயல்பாகவே இருந்தன.

நேஷனல் புக் டிரஸ்டில் வேலையாயிருந்த அவரை, அவரது கடைசிக் காலங்களில் பெங்கéருக்கு மாற்றினார்கள். அந்த மாறுதல் அவருக்குப் பிடிக்கவேயில்லை. தன் மனைவிக்கும் அந்த மாறுதல் பிடிக்கவில்லை என்றும் ஆனால் பெங்கéர் போகாமல் வேறு என்ன செய்வது என்றும் என்னிடம் அவர் அலுத்துக்கொண்டார். "வாழ்க்கைப் போக்கில் நேரக்கூடிய விஷயங்களை ஜீரணித்துக்கொள்ள வேண்டியதுதான்" என்று அவரை ஆறுதல்படுத்தினேன். மனமில்லாமல் பெங்கéர் போன அவர் பிறகு பெங்கéரிலிருந்து உயிருடன் திரும்பவில்லை.

அவரது உவினர்கள் சென்னையில்தான் இருந்தார்கள். சென்னை வரும்போதெல்லாம் என்னைச் சந்திக்க அவர் தவறியதில்லை. ஏதோ ஒருமுறை அப்படிச் சந்திக்காமல் போனது பற்றி அளவற்று வருந்தி அவர் கடிதம் எழுதியதாக ஞாபகம்.

அவரும் நானும் மணிக்கணக்கம்ல் பேசுவோம். பூ மாதிரி உணர்வுகள் அவருக்கு. மென்மையும் பிரியமுமாய் உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுக்கிறார்போல் பேசுவார். அவருடன் இருக்கும்போது உலக வாழ்க்கை பற்றி மனத்தில் நம்பிக்கை கலந்த ஒரு பாதுகாப்புணர்வு ஏற்படும்.

தீபத்தில் அவர் "காகித மலர்கள்" எழுதியபோது கையெழுத்துப் பிரதியில் ஒரு பாரா பாலியல் கலந்து காணப்பட்டது. ஜானகிராமன் போலத்தான் அவர் பாலியல் பிரச்னைகளை எழுதுவாரேயல்லாமல், கிளர்ச்சி நோக்கில் எழுதுபவர் அல்ல. என்றாலும் நா.பா. அந்தப் பாராவை பிரசுரிக்க விரும்பவில்லை. அந்தப் படைப்பு புத்தகமாக வரும்போது வேண்டுமானால் அவர் வெளியிட்டுக்கொள்ளலாம் என்றும் கூறி நா.பா. அந்த வரிகளை எடிட் செய்துவிட்டார். "நா.பா. கருத்துச் சரிதான்" என்று கடிதம் எழுதியிருந்தார் ஆதவன். நா.பா., கஸ்தூரிரங்கன் இருவர் மேலும் அவ்வளவு மரியாதை அவருக்கு. தமது ஒரு புத்தகத்தை கஸ்தூரிரங்கனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

தீபத்தில் அவர் எழுதிய நிழல்கள் என்ற கதையைப் பல்லாண்டுகள் கழித்து ஆனந்த விகடனுக்கு, தீபத்தில் முன்னரே வெளிவந்தது என்று குறிப்பிடாமல் அனுப்பிவிட்டார். விகடனிலும் அது பிரசுரமாகியது. பிறகு விகடனிலேயே ஏற்கனவே வெளிவந்த கதையை விகடனுக்கு அவர் கொடுத்தது தவறு என்று கண்டனக் குறிப்பும் வெளியாயிற்று. செய்தது தவறு என்பதுதான் என் கருத்தும். ஆனால் அவர் ஏன் அவ்விதம் நடந்துகொண்டார் என்று தெரியவில்லை.

தமிழ் இலக்கியத்தை நிரந்தரமாக அலங்கரிக்கக்கூடிய பல மணிமணியான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். கணையாழியில் தொடராக வெளிவந்த அவரது "என் பெயர் ராமசேஷன்" என்ற நாவல் பாலியலை உளவியல் கண்ணோட்டத்தில் ஆராயும் உயர்ந்த நாவல். நா.பா. தினமணி கதிரில் ஆசிரியராக இருந்தபோது, தினமணியின் மாத வெளியீடான கதைக் கதிரில் ஒரு நாவல் எழுதினார். கதிரில் பவுன் மூட்டை என் தலைப்பில் ஒரு நல்ல சிறுகதை எழுதினார்.

சுறுசுறுப்பாக நிறைய எழுதுபவர். இன்னும் நிறைய எழுதியிருக்க வேண்டியவரும் கூட. கொஞ்சம் ஆயுள் மட்டும் கிட்டியிருந்தால் தமிழ் இலக்கியம் பல உயர்ந்த சிகரங்களை அடைய அவர் எழுத்து உதவியிருக்கும். என்ன செய்வது? விதியின் தீர்ப்பு வேறு மாதிரி.

காலமான பிறகாவது அவருக்கு சாகித்ய அகாதமி பரிசு கொடுக்கப்பட்டது ஒரு சின்ன ஆறுதல்.

இப்போதும் எழுத்துலகில் நிறைய இளைஞர்களைப் பார்க்கிறேன். நுணுக்கமாக எழுதுபவர்கள், பெரும் மேதாவிலாசம் இருந்தாலும் அன்பும் அடக்கமும் உடையவர்கள்...இத்தகைய இளைஞர்களைப் பார்க்கிறபோது ஆதவனைப் பற்றிய ஞாபகம் வந்துகொண்டே இருக்கிறது.

0 Comments:

Post a Comment

<< Home

If you are not able to view this site , don't worry, you are not missing anything great. This contains my ramblings in , Thamizh (Tamil) , thats it.

My Profile | My Mailஅடிக்கடி மேய்வது
Mitran Foundation

Jambav - software for children with special needs


தமிழ் விக்சனரி

பரணை

நன்றி

தமிழ்மணம்
Blogger