<xmp><body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6886596\x26blogName\x3d%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://santhoshguru.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://santhoshguru.blogspot.com/\x26vt\x3d-1173546591900635210', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script></xmp>

கசாகூளம் - பெயர்க்காரணம்

Monday, September 19, 2005

ஆதவன் - பாகம் மூன்று
அகவுலக ஆய்வாளன் - பா. ராகவன்

எண்பதுகளின் இறுதியில், தொண்ணூறின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்து, தமிழ்ச் சிறுகதைத் துறையில் இன்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு சிறப்பானப் பங்களிப்பை வழங்கிவரும் எந்த ஓர் இளம் படைப்பாளியும் இரண்டு பேரின் தாக்கம் ஏற்படாமல் தாம் எழுத வரவில்லை என்று மனப்பூர்வமாகச் சொல்ல முடியாது. அந்த இருவர்: ஆதவன், சுப்ரமணிய ராஜூ.

இருவருமே மிக இளம் வயதில் நிறைய சாதித்தவர்கள். வேறுபாடில்லாமல் எல்லாத் தரப்பு மூத்த எழுத்தாளர்களாலும் அங்கீகரிக்கப்பட்டு, இருவருமே நம்ப முடியாத இளம் வயதில் இறந்துபோனவர்கள். இருவரது மரணமும் துர்மரணம்தான் என்பதும் சோகமான சரித்திரம். ஆதவன் ஆற்றில் அடித்துப் போகப்பட்டார், சுப்ரமணிய ராஜூ சாலை விபத்தில் மாண்டுபோனார்.

நகர்ப்புற, மத்தியதர இளைஞர்களின் மன உணர்வுகள்தாம் இந்த இரு படைப்பாளிகளின் சிந்தனையையும் இடைவிடாமல் பாதித்துக்கொண்டிருந்தன என்பதும் ஓர் எதிர்பாராத ஓற்றுமை. ஆதவனின் கதைகளில் தற்கால இளைஞர்களின் "கேரிகேசர்கள்' எப்படி தவிர்க்க முடியாமல் வந்து விழுந்துகொண்டிருந்தனவோ, அதேமாதிரி ஆதவன் பற்றிய இக்கட்டுரையில் சுப்ரமணிய ராஜூவை நினைவுகூர்வதும் தவிர்க்க முடியாமலே போவதும் ஒரு நிர்ப்பந்தமாகி விடுகிறது.

ஆதவன் தம் இளவயது முதலே தில்லியில் வாழ்ந்தவர். நேஷனல் புக் டிரஸ்டில் அதிகாரியாகப் பணியாற்றியவர். காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன், முதலில் இரவு வரும் போன்ற குறிப்பிடத்தகுந்த புத்தங்களைத் தந்தவர். தேர்ந்த எழுந்து கைவரப்பெற்ற அவர், தமிழ் தவிர இந்தி, ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர்.

இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதுவது என்று அவர் முடிவு செய்திருந்தால் தேசிய அளவில் இ உலக அளவில் கூடக் கொண்டாடப்படத்தக்க எல்லையைத் தொட்டிருக்கக்கூடும். இந்திரா பார்த்தசாரதி கூறுவது போல, தமிழில் எழுதுவது என்று அவர் முடிவெடுத்ததே, தம் வேர்களை அவர் வெட்டிக்கொள்ள விரும்பாததனால்தான்!

ஜானகிராமனின் நளினம், புதுமைப்பித்தனின் பாய்ச்சல், இந்திரா பார்த்தசாரதியின் புத்திசாலித்தனம், அசோகமித்திரனின் வடிவ அமைதி என ஆதவனின் எழுத்துக்கொரு இலக்கணம் புனைய முற்பட்டாலும் எந்தச் சட்டத்திலும் இரு விநாடிகள் கூடக் பொருந்தியிராமல் பிதுங்கி வெளிவந்துவிடும் அவரது கலை.

காரணம், பாத்திரங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்த தமிழ்ச் சிறுகதை உலகில் முதல் முதலில் பாத்திரங்களின் மனங்களை மட்டுமே பேசவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர் ஆதவன்.

அவரது கதையொன்றில் ஓர் இளைஞன் நினைப்பான், ""குருதத்தே தற்கொலை செய்துகொண்டாயிற்று. நான் ஏன் இளியும் உயிரோடு இருக்க வேண்டும்?''

சினிமாக் கதாநாயகர்களைக் கடவுள்களாகவே கொண்டாடும் ஒரு தேசத்தின் நாடித்துடிப்பே இந்த ஒரு வரியினுள் அடங்கியிருப்பதைச் சற்று உன்னிப்பாக அணுகுபவர்கள் கண்டுகொள்ள முடியும்.

ஆதவனின் மொத்தக் கதையுலகமே சோகமெனும் சல்லாத் துணியால் போர்த்தப்பட்டிருப்பது போல் தெரிவது, அறிமுக வாசகனுக்கு முதலில் இலேசான சங்கடமேற்படுத்தக் கூடியது. வீடு வீடாகப் படியேறி கொலுவுக்கு அழைக்கிற பெண்ணைப் போல, ஒரே ஒரு பாத்திரமே அவரது எல்லாக் கதைகளினுள்ளும் புகுந்து மீள்வது போன்ற தோற்றம் அல்லது பிரமை கூட உண்டாவது சாத்தியந்தான். நகர்புற இளைஞர்களின் வாழ்வெனும் திரைக் கதைகளுக்குள் அதிக வேறுபாடில்லை என்பதே இதன் காரணம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கழிப்பது என்கிற சாதாரண விஷயம் அந்த நாகராஜூக்கு (ஞாயிற்றுக் கிழமையும் அறையிலோர் இளைஞனும்) எப்படியொரு பூதாகாரமான பிரச்சினையாகிறதோ, அதே விதத்தில்தான் ஆதவனின் இன்னொரு கதையில் (இறந்தவன்) வரும் "அவனு'க்குத் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்துவதா, வேண்டாமா என்பதும் கறையான், புத்தகத்தை அரிப்பதுபோல் மனத்தை அரித்து துவம்சம் செய்கிறது.

ஒரு கட்டத்தில் சலிப்புற்று அந்த "அவள்' நினைப்பாள்: "Why dont you say you want this, you want that...say you want me."

செயல்களுக்கு உள்ளது போல சிந்தனைக்கு வரம்பில்லாததுதான் எத்தனை பூரிப்பேற்படுத்தும் விஷயமாகிறது.

ஆதவனின் கதைகளை வாசிக்கிற போது இடைவிடாமல் யாரோ பேசிக் கொண்டே இருத்தல் போலவும் பேச்சென்கிற தொடர்புகொள்ளும் வழிமுறையே வழக்கொழிந்து, பேரண்டம் முழுதும் சூனியம் வியாபித்து விட்டது போன்றும் இருவித உணர்வுப் புயல் வாசகனை ஒருசேரத் தாக்கும்.

இந்த அசாத்தியமான மனமொழிக்கு கையாளல் உத்தியை அவர் விடாப் பிடியாகத் தம் அத்னை கதைகளிலும் கையாண்டு வந்திருக்கிறார். கிழவனின் மனம், திருமணமாகாதவர்களின்/ ஆனவர்களின் மனங்கள், பெண்களின் மனம் / உள் மனம், தாயின் மனம், அதிகாரிகளின் மனம், சேவகர்களின் மனம், வேலையில்லாதவர்களின் மனம், வேலையை விரும்பாதவர்களின் மனம், இவைதான் ஆதவன் சுரங்கம் தோண்டிப் பார்க்கத் தேர்ந்தெடுத்த தளங்கள்.

இந்த பயிற்சியில் ஏற்படும் இறைச்சலை ஒரு லேத் மிஷின் இயங்குவதுடன் ஒப்பிடலாம்.

ஓடத் தொடங்கும் போதான சகிக்க இயலாத இறைச்சல்; பிறகு இரைச்சலே இசையானப் பின் மௌனமாகவும் ஆகிவிடுகிற பேரமைதி.

ஆனால் இந்தச் சூட்சுமங்களின் இலக்கணத்தை ஆதவன் முன்வரையறுத்துக் கொள்வதில்லை. ஒரு விளையாட்டுப் போல இ நெட் பிராக்டிஸாக மட்டும் இ ஒவ்வொரு கதையிலும் இந்த மனமொழியை வேறு வேறு வடிவங்களில் கையாண்டு பார்கிறார். தாம் எழுதுவதை அவரே ஒரு விளையாட்டு என்றுதான் குறிப்பிடவும் செய்கிறார்.

ஆனால் இலக்கியம் என்பதோ படைப்பென்பதோ விளையாட்டல்ல என்பதையும் அவர் அறிந்திருந்தார். அல்லாத பட்சத்தில் ஒரு மயிர்கூட நரைக்கத் தொடங்காத ஒரு முன்னிளமைப் பருவத்தில் ஒரு கிழவனாரின் மனத்தில் புகுந்துகொண்டு அவரால் கதை சொல்லியிருக்க முடியாது (ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்).

தன் "நானை' அடையாளம் காணுவதற்காக எழுதுவதாகக் கூறிய ஆதவனின் எல்லாக் கதைகளிலும் ஏராளமான நான்கள் உலவுவதைக் காண்பதும், அவற்றில் எது ஆதவனின் நிஜமான நான் எனத் தேடுவதும் கூர்மையான இலக்கியப் பயிற்சியை மேற்கொள்ள விரும்புவோருக்கு ஒரு நல்ல விளையாட்டாயிருக்கும்.

வாழ்நாள் முழுவதும் பிறர்பால் அன்பு செலுத்தி, எல்லோருக்கும் எந்த வதித்திலாவது உதவி, எல்லார் மனங்களிலும் இனிய உருவமாக இடம் பெற்றவர் என்கிற பொருளில் ஆதவன் பற்றி அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஒரு குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டே ஆதவன் தேடிய அந்த "நானை' அவர் கதைகளில் கண்டுபிடித்து விட முடியும்; சுலபமுங்கூட.

காரணம், அவரது எழுத்து முகங்களைப் பற்றியதல்ல; அகங்களைப் பற்றியது.ஆதவன் வீட்டுக்குச் சென்று வந்தேன் - ஆர்.வெங்கடேஷ்

அவரது குரலில் தொனித்த வாத்ஸல்யமும் கரிசனமும் என்னை கட்டிப்போட்டுவிட்டன. அதுநாள் வரை அவர் எப்படிப்பட்டவரோ, பேசுவாரோ மாட்டாரோ என்றெல்லாம் விரிந்த கற்பனைகள் அத்தனையும் நொறுங்கிப்போக, "வீட்டுக்கு வாங்கோளேன்" என்று தொலைபேசியில் அழைத்தபோது, அடுத்த நிமிடம் நான் பெங்களூரில் இருக்க மாட்டோமா என்ற பரபரப்பு என் உடம்பெங்கும் தொற்றிக்கொண்டது. நினைவில் நிற்கும் பல பெண் பாத்திரங்களைப் படைத்த அற்புத எழுத்தாளனின் வாழ்வில் கலந்த பெண் அவர். சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொண்ட பெண் அவர்.


திருமதி ஹேமா சுந்தரம் - ஆதவன் சுந்தரத்தின் மனைவி.

அடுத்து வந்த வெள்ளிக்கிழமை இரவு பெங்களூர் ரயில் பிடித்து சனிக்கிழமை காலை போய் இறங்கினேன். பெங்களூரில் இருக்கும் நண்பர் என்.சொக்கனிடம் ஏற்கனவே சொல்லிவைத்திருந்தேன். ஒன்பது ஒன்பரை மணிவாக்கில் இருவரும் ஆதவன் வீட்டுக்குக் கிளம்பினோம். மீண்டும் ஒருமுறை தொலைபேசியில் அழைத்து, நாங்கள் வருவதைத் தெரிவித்துக்கொண்டோம். ஒரு ஆட்டோ பிடித்து உட்கார்ந்துகொண்டோம்.

சொக்கனுக்கு என் ஆதவன் ப்ரியம் ஏற்கனவே தெரியும். அவர்தான் "காகித மலர்கள்" புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தந்தவர். ஆட்டோவில் ஆதவனைப் பற்றியும், அவர் புத்தகங்களைத் தேடி தேடி நான் சேகரிக்கும் விதம் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தேன். முக்கியமாக அசோகமித்திரன் தன் சேகரிப்பில் இருந்து ஒவ்வொரு புத்தகமாகத் தேடி எடுத்துக் கொடுத்தது என் மனத்தில் என்றும் மறையாத ஒன்று. ஆதவனின் அனைத்துப் புத்தகங்களையும் மீண்டும் மறுபதிப்பு கொண்டு வரவேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு உரமிட்டவர் அசோகமித்திரன்.

மற்றொரு ஆதவன் ப்ரியர் பால்நிலவன். அவரது சேகரிப்பில் இருந்தே நான் "பெண், தோழி, தலைவி" என்ற தினமணிக் கதிர் குறுநாவலைப் பெற்றுக்கொண்டேன். 1982ல் வெளியான மாதநாவல் அது. மிகப் பத்திரமாகப் பொத்தி பொத்திக் காத்து வைத்திருந்தார் பால்நிலவன். கேட்டவுடன் மனம் நிறைந்து கொடுத்தார்.

ஆதவனைப் பற்றிய பல ஆச்சரியங்கள் எனக்கு உண்டு. அதில் ஒன்று, குழந்தைகளுக்கு அவர் எழுதியுள்ள கதைகள். மிக மிக முதிர்ச்சியுடன், நவீன வாழ்வில் மத்திய தர மனிதர்களைப் பற்றி எழுதிய ஒருவரால், சிறுவர்களுக்குக் கதை எழுத முடியுமா என்ற சந்தேகத்தை பொய்யாக்கியவர் ஆதவன். "சிங்க ராஜகுமாரி" என்ற குழந்தைகள் கதைத் தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். வானதி வெளியீடு. அசோகமித்திரன் சேகரிப்பில் இருந்து இந்தத் தொகுதியைப் பெற்றுக்கொண்டேன். அத்துடன், மதுரம் பூதலிங்கம் (வாசவேஸ்வரம் 'கிருத்திகா') எழுதிய பாலர் ராமாயணம் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆதவன் சுந்தரம். மிக மிக எளிமையாக, குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் அவர் செய்துள்ள மொழிபெயர்ப்பு என்னைக் கவர்ந்ததென்றால், மற்றொரு புறம் சிங்க ராஜகுமாரி தொகுதி பெரிய ஆச்சரியத்தைத் தக்க வைத்துக்கொண்டிருந்தது. எளிமையான கதைக் கருக்கள். அழகான நடை. தமிழ் தெரிந்த பத்து வயதுக் குழந்தையால் தாராளமாகப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவு சீரான ஓட்டம்.

அப்புறம் தான் தெரிந்துகொண்டேன், அவர் தமது எழுத்துப் பணியை "கண்ணன்" சிறுவர் இதழிலேயே தொடங்கியவர் என்று. லெமன் (மஞ்சரி ஆசிரியராக இருந்தவர் - லட்சுமணன்), ரமணீயன், அம்பை எல்லாரும் அவரோடு கண்ணனில் எழுதி வெளியே வந்தவர்கள்தான்.

ஆட்டோ லிங்கராஜபுரத்தை அடைந்திருந்தது. இரண்டு மூன்று இடங்களில் நிறுத்தி நிறுத்தி, முகவரியை விசாரித்துக்கொண்டோம். ஒரு சின்ன பாலத்தினடியில் போய், வலது புறம் திரும்பி, நேரே ரயில்வே லைனை ஒட்டி ஆட்டோ ஓடியது. "பத்மாலயா" என்ற வீடு கண்ணில் பட்டபோது, ஒருசில நொடிகள் நான் நெகிழ்ந்துபோனேன். பழைய கால வீடு.

சின்ன கேட். எதிர்புறம் சென்னை போகும் ரயிலின் பாதை தெரிந்தது. கேட்டைத் திறந்தால் இரண்டு புறமும் பூஞ்செடிகள். மணியடித்துக் காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனமெங்கும் ஆனந்தம். இது ஆதவன் வீடு. இங்கே நடத்திருப்பார். இங்கே உட்கார்ந்துகொண்டிருப்பார். குரலும் வாசனையும் வளைய வந்த இடங்கள் இவை.

என்னை அறியாமல் அவர் நான் காண, ஏதோ ஒன்றை மிச்சம் வைத்து விட்டுப் போயிருப்பார் என்று தோன்றியது. அபத்தமாகக் கூட இருக்கலாம். ஆனால், நம்பிக்கை இருந்தது.

****

"1976ல் கல்யாணம் ஆச்சு. பேப்பர்ல விளம்பரம் குடுத்து, அதுல பார்த்து தேர்ந்தெடுத்து வந்து பொண்ணு பார்த்தார். இந்த பெங்களூர் வீட்டுலதான் பொண்ணு பார்ததார். வீட்டுக்கு வந்தபோது, இங்க இருக்கற இங்கிலீஷ் புக்ஸ், பேப்பர்களெல்லாம் பார்த்திருப்பார் போலயிருக்கு. என்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேட்டார். "உனக்குத் தமிழ் தெரியுமா?"ன்னு கேட்டார். தெரியும்னு சொன்னேன்.

அவ்வளவுதான் பேசினோம். அப்புறம் கல்யாணம் ஆச்சு. கல்யாணத்தும்போதுதான், என் ரிலேடிவ் பையன் ஒருத்தன் கணேசன்னு சொல்லிட்டு, அவர அடையாளம் கண்டுகிட்டு, அவர்கிட்டபோய், நீங்கதானே ஆதவன், தீபத்துல கதையெல்லாம் எழுதறீங்களேன்னு கேட்டான். அப்பத்தான் எங்களுக்கு அவர் ஒரு ரைட்டர்னே தெரிஞ்சுது. அதுவரைக்கும் எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.

அடுத்தநாளே, கணேசன், தீபத்துல வந்த காகித மலர்கள் தொடரைக் கட் பண்ணி பைண்ட் பண்ணிக் கொண்டு வந்துகொடுத்தான். அவரும் உடனே அவன் வீட்டுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிண்டிருந்தார். அப்படி ஒரு எளிமை. தான் யாரு என்னன்னு கூட சொல்லிக்க மாட்டார்.

அவரோட அம்மா சொல்லுவா, எனக்கு இப்படி ஒரு பையன் இருக்கான்னு அக்கம்பக்கத்துல இருக்கறவாளுக்குக் கூட தெரியாது. அப்படி ஒரு சைலண்ட். எப்ப பார்த்தாலும் படிச்சுண்டே இருப்பார். அவர் மட்டுமல்ல, அவரோட அப்பா, அக்கா, தம்பி, தங்கை எல்லாரும் ஏதாவது படிச்சுண்டே இருப்பா. சாப்பிடும்போது கூட கையில ஒரு புக்கு இருக்கும்.

அவரோட அப்பா, பெரிய சம்ஸ்கிருத ஸ்காலர். டில்லியில படிச்சதால, இந்திதான் ஸ்கூல்ல படிச்சது. பின்னால, தமிழ் ஆர்வத்துல தமிழ் புக்கெல்லாம் படிக்க ஆரம்பிச்சார். அப்போதெல்லாம், மெட்ராஸ் போயிட்டு, தில்லி வந்தாரானால், இரண்டு கையிலும் புத்தகக் கட்டுதான் இருக்கும். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வருவார். "யாராவது ஸ்டேஷனுக்கு வந்து ஹெல்ப் பண்ணக்கூடாதோ"ன்னு கேப்பார்.

படிக்கறதுல அப்படி ஒரு ஆசை. வீட்டுல ஐஞ்சாறு டிக்ஷ்னரிகள் இருக்கும். காலையில குளிச்சுட்டு, தலைய துவைட்டிக்கிட்டே, ஓடிவந்து டிக்ஷ்னரிய திறந்து என்னவோ வார்த்தைகளைப் பார்த்துண்டிருப்பேர். இரண்டு மூன்று டிக்ஷ்னரிகளை மாத்தி மாத்தி பார்ப்பேர்.

அதிர்ந்து பேசவே தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க ஊட்டிக்குப் போனோம். அங்க படிப்படியா இருக்கற மலையையும் இயற்கையையும் பார்த்துட்டு, "இதெல்லாம் பார்த்துக்கோ, சீக்கிரம் இதெல்லாம் என் எழுத்துல வரும்"னு சொன்னார்.

அவர் அதிகமும் என்ன கூட்டிக்கிட்டு போனது எழுத்தாளர்கள் வீட்டுக்குத்தான். அங்கையும் அதிகம் பேசமாட்டார். இ.பா மேலயும் அசோகமித்திரன் மேலயும் ரொம்ப அபிமானம். இங்க பெங்களூர்ல இருந்தபோது, அடிக்கடி சரஸ்வதி ராம்நாத் மாமியப் பார்க்கப் போயிடுவார்.

எழுத்து மேல ரொம்ப ஆசை. இப்படித்தான் இருக்கணும், அப்படித்தான் இருக்கணும்னு ஏதும் அவசியமில்லை. எங்கவெண்ணா உட்கார்ந்துண்டு எழுதுவார். மடியில ஒரு சூட்கேஸை… வைத்துக்கொண்டு எழுதிக்கொண்டே இருப்பார். மணி மணியா இருக்கும் எழுத்து. சில சமயங்கள்ல, போஸ்டாபீஸ் போய் கடைசி வரிகளையெல்லாம் எழுதி, போஸ்ட் பண்ணிட்டு, ஆபிஸ் போவார்.

முதல்ல ரயில்வே வேலையா இருந்தார். ஏழு வருஷம். அப்பறம் 1975லதான் நேஷ்னல் புக் டிரஸ்ட், தமிழ் பிரிவுக்கு அசிஸ்டெண்ட் எடிட்டர் வந்தார். 1984 வரைக்கும் தில்லியில இருந்தோம். அப்புறம், அவருக்கு பெங்களூருக்கு போஸ்டிங்க ஆச்சு. இங்க வந்தோம்.

என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடியே, அவர் காகித மலர்கள் எழுதிட்டார். அதை ஒரு தபசு மாதிரி பண்ணினேன்னு சொல்வார். தில்லியில வெளிய போகும்போது, அவர் உட்கார்ந்துண்டிருந்த காபி பார், ரெஸ்டாரெண்ட் எல்லாம் காண்பிப்பார்.

பத்திரிகைகள்லேருந்து கதை கேட்டாதான், கதை எழுதுவார். கதை எழுதிட்டு, என் கிட்ட படிக்கக் குடுப்பார். "எனக்கென்ன, இதெல்லாம் புரியப்போறது"னு சொன்னா, "ஐயோ, எல்லாருக்கும் புரியணும்னுதான் கதை எழுதுறேன். உனக்கும் புரியணும். படிம்"பார்.

இங்க பெங்களூர் வந்த பின்னால, பாரதியாரை படிச்சுண்டே இருப்பார். அதுக்குள்ளேயே "புழுதியில் வீணை" எழுதிட்டார். 39 வயசுக்குள்ள என்னமா எழுதியிருக்கான். சாதிச்சுருக்கான்னு பாரதியார் மேல ரொம்ப ஆச்சரியப்படுவார். அந்த நாடகத்தை எப்படி மேடையேத்தணும்னு பெரிய கனவே இருந்தது அவருக்கு. அந்த நாடகத்தைப் படிச்சாவே தெரியும். நிறைய குறிப்புகள் எழுதியிருப்பார். அதுல தீ, தீ, தீ ன்னு வர வரிகள் எப்படி சொல்லப்படணும்னெல்லாம், அவரே சொல்லச்சொல்லி, கேசட்டுல பதிவு பண்ணி வெச்சிருக்கார்.

தமிழ் மாதிரியே இங்கிலீஷ்லயும் அவருக்கு அபார திறமை உண்டு. எம்.எஸ்.ராமஸ்வாமி அவரோட சிறுகதை ஒன்றை மொழிபெயர்க்கறேன்னு சொல்லி கேட்டார். அப்புறம், பின்னால, சாகித்ய அகாதமியோட ஒரு புக்குல, ஆதவனே மொழிபெயர்த்த ஒரு கதையைப் படிச்சுட்டு, நிச்சயமா என்னால இது மாதிரி முடியவே முடியாதுன்னு சொல்லி லெட்டர் போட்டுட்டார்.

மேடையில பேசும்போது ரொம்ப நிதானமா பேசுவார். தான் சொல்லற வார்த்தை சரியான வார்த்தையான்னு யோசித்து யோசித்து பேசுவார். அவர் வார்த்தைகளை கோர்க்கறார்ங்கறது அவரோட முகத்தைப் பார்த்தாவே தெரியும். ஆனால், எழுத்துல அப்படி இல்ல. எழுதித் தள்ளிண்டே இருப்பார். நல்ல ஸ்பீட்."

*****

விசாலமான கூடம். எதிர் எதிர் பக்கங்களாய்க் கொண்ட இரண்டு, மூன்று சீட் சோபாக்கள். நடுவே ஒரு டீப்பாய். வலப்பக்கம் தலைக்குமேல் ஷோக்கேஸ். இடதுபக்கம் ஒரு அறை. நேர் எதிரே ஒரு அறை. எதிர் அறையை ஒட்டி வலப்பக்கம் சமையலறை. இடப்பக்கம் குளியலறை போகும் பாதை. வெள்ளையடிக்கப்படாத வீடு. மிதமான இருட்டும் மெளனமும் அந்த வீடு முழுவதும் நிறைந்திருந்தது. ஆதவனைத் தம்முள் பொத்தி வைத்திருக்கும் மெளனம்.

எதிரே சாருமதி. ஆதவனின் மூத்த மகள். நல்ல உசரம். மெளனம். ஆதவனை அப்படியே உரித்து வைத்திருந்தார். பக்கத்தில் அவரது அம்மா திருமதி ஹேமா. பக்கத்தில் அவரது அம்மா. ஆதவனின் மாமியார். திருநீறு துலங்கும் வெள்ளை வெளேர் மாமி.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் இனிய கணவன், அன்புள்ள அப்பா, பொறுப்பான மாப்பிள்ளை, அதற்குமேல் கெளரவமான எழுத்தாளர் என்ற பெருமை அவர்கள் பேச்சு முழுவதும். ஆதவனின் எழுத்துக்களை படித்து, அதன் மேல் கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதை விட, அவரின் ஆளுமை சார்ந்து விசுவாசம் கொண்ட குடும்பம் அது.

சாருமதி தான் சிறுவயதில் எழுதி, கோகுலம் ஆங்கிலம் இதழில் வெளியான கவிதையைக் கொண்டுவந்து காண்பித்தார். முழுப்பக்கம் நீண்டிருக்கும் அழகிய கவிதை. கீழே சாருமதி சுந்தரம் என்ற பெயர் கெட்டி எழுத்தில். அப்பா தமிழ் சொல்லிக்கொடுத்தது, லெமனின் கவிதையைப் படிக்கச் சொல்லிக்கொடுத்தது என்று அனைத்தையும் தன் நினைவில் இருந்து நீவி நீவி எடுத்துத் தந்தார் சாருமதி.

ஆதவன் மறையும் போது, சாருமதிக்கு ஒன்பது வயது. இன்று கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு, வேலைக்குக் காத்திருக்கிறார். இரண்டாவது மகள், நீரஜா. வாசல் கதவைத் திறந்து எங்களை வரவேற்றது நீரஜாதான். கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு. "அறிவுக் களை ததும்பும் முகம்" என்று கதைகளில் படித்திருக்கிறேன். சாருமதி, நீரஜாவைப் பார்த்தபின், அந்த சொற்றொடரின் அர்த்தத்தை அன்றுதான் நேரில் உணர்ந்துகொண்டேன்.

திருமதி ஹேமா சுந்தரத்தைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கச்சலான தேகம். ஆனால், பாறைபோல் உறுதி, மனசுக்குள். இல்லையென்றால், இன்று இவ்வளவு தூரம் பெண்களை வளர்த்து முன்னேற்றியிருக்க முடியுமா?

*****

"அவர் போனதை என்னால நம்பவே முடியல... அவரோடு ·பிரெண்டோட சிருங்கேரி போய்ட்டு வரேன்னு கிளம்பினேர். அவருக்கு பெங்களூர் அவ்வளவா பிடிக்கல. அவருக்கு தில்லிதான் பிடிச்ச ஊர். இங்கே கொண்டு வந்து போஸ்டிங் போட்டுட்டாளேன்னு அவருக்கு வருத்தம்தான்.

ஆனாலும், வேலை பார்த்துண்டுதான் இருந்தார். நடுவுல வேற ஒரு டிவிஷனுக்கு மாத்தினாளோ என்னவோ? சரியா ஞாபகம் இல்ல. எழுதறவனைப் போய் வேறெதோவெல்லாம் பண்ணச் சொல்றாளேன்னு அவருக்கு வருத்தம். அவரை அட்மினிஸ்ட்ரேஷன் எல்லாம் பார்த்துக்கொள்ளச் சொன்னான்னு ஞாபகம்.

மூனாவது நாள்தான் பாடி கெடைச்சுது. பார்க்கவே முடியல... உடம்பெல்லாம் ஊதிப் போய்...

அப்பறம், எனக்கென்ன பண்றதுன்னு தெரியல.. நான் சின்னப் பொண்ணு. அவர் போயாச்சு. சின்னச் சின்னதா ரெண்டு கொழந்தைகள். அவர் இருந்தவரை நான் எதிலேயும் போனது கிடையாது. எடுத்து செஞ்சது கிடையாது.

என்ன பண்றதுன்னு தெரியல... யார கேக்கறது, என்ன செய்யணும்னு தெரியல... எங்கப்பாதான் எல்லாம் முன்ன நின்னு செஞ்சார்.

குழந்தைகள் வேற இருக்கே. காப்பாத்தியாகணுமே.. படிக்க வெக்கணுமே... முன்னேத்தியாகணுமே.. நல்ல வேளையா நேஷ்னல் புக் டிரஸ்டிலேயே வேலை கொடுத்தா...

அப்புறம் இருபது வருஷம் நான் தலைநிமிர்ந்தே பார்க்கல. அவரோடு புக்ஸ், கட்டுரைகள், எழுதி மிச்சவெச்சது எல்லாம் அப்படியே டெல்லியிலேயே போட்டுட்டு வந்துட்டோம். அவரோட தம்பி வைத்யநாதன்தான் எடுத்து வெச்சிருந்தார்.

குழந்தைகளை வளர்க்கறது மட்டும்தான் என் கடமைன்னு நான் கண்ண மூடிண்டு வேலை பார்த்தேன். கார்த்தால போனா ராத்திரி தான் ஆத்துக்கு வரமுடியும். வெளிய எங்கையும் போனதில்ல. ஒரு சினிமாவோ, டிராமாவோ எதுவும் யோசிச்சதில்ல..

அவர் புக்ஸைப் படிச்சவா யாராவது லெட்டர் போடுவா.. அப்படியே எடுத்து வெச்சுப்பேன். பதில் கூடப் போட முடிந்ததில்ல. வருஷம் ஆக ஆக, பலரும் அவர் எவ்வளவு முக்கியமான ரைட்டர்னு வந்து சொல்லுவா... கேக்கும்போதே கண்ணுல ஜலம் கண்டிண்டும். கேக்கறதுக்கு அவர் இல்லாம போய்ட்டாரேன்னு அடிச்சுக்கும்.

என்னோட அப்பா இருந்தவரைக்கும் கொஞ்சம் தெம்பா இருந்தது. பல வேலைகளை அவர் பார்த்துண்டார். அவர் போனப்புறம், எல்லாத்தையும் நானே பார்த்துக்கவேண்டியதாயிடுத்து. அம்மாவுக்கும் வயசாயிடுத்து. இவா ரெண்டு பேரும் வளர்ந்துட்டா.. அதுவே எனக்குப் பெரிய சந்தோஷம்..."

*****

சாருமதி, சில பழைய புகைப்படங்களைக் கொண்டு வந்து காண்பித்தார். மடியில் குழந்தையை (சாருமதியை) வைத்துக்கொண்டிருக்கும் ஆதவன். ஒரு சில குருப் போட்டோக்கள். அப்புறம், ஆதவனின் கல்யாண ஆல்பம் இருப்பதாகச் சொன்னார், அவரது மாமியார். சில கணங்கள் தயங்கினார் திருமதி ஹேமா சுந்தரம்.

சில நிமிடங்களில் அடுத்த அறையில் இருந்து சாருமதி அந்த ஆல்பத்தைக் கொண்டுவர, உள்ளே திருமதி ஹேமா சுந்தரம் மனம் கசிவது தெரிந்து. கேட்டிருக்கக்கூடாது, தவறு செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி சட்டென மேலெழுந்து என்னை இம்சித்தது. அனாவசியமாக, பழைய துக்கங்களை கிளறிவிடுகிறோம் என்ற எண்ணமே என்னை மேலும் வருத்தத்துள்ளாக்கியது. என்ன செய்வது என்று தெரியவில்லை. திருமதி ஹேமா சுந்தரம் கண்ணைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள். ஒல்லியாய், கெட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு, பஞ்சகச்சத்தில் ஆதவன். மாப்பிள்ளை அழைப்பு, பின், காசி யாத்திரை, ஊஞ்சல், நலுங்கு, பிடிசுற்றிப் போடுதல், பின் திருமாங்கல்யம் முடிதல், மெட்டி அணிவித்தல் என்று அத்தனையிலும் மெளன ஆதவன். அதே கூச்சம். அதே ஒடுக்கம். அதே உறங்கும் கண்கள்.

எனக்குச் சொந்தத்தில் அண்ணன் கிடையாது. எனக்கு அண்ணா என்று யாராவது இருந்திருந்தால், அது ஆதவன் போல் இருக்கவேண்டும் என்று பல நாள்கள் கனவு கண்டிருக்கிறேன். நான் விரும்பும் அதே குணாதிசயங்களோடு, ஆதவன் கருப்பு வெள்ளையில் காட்சி தந்துகொண்டிருந்தார். ஒரு தென்னை மரத்தின் கீழ் குழந்தையைத் தோளில் ஏந்தியபடி. முதிர்ச்சியும் கனிவும் பொலிந்த முகம்.

மீண்டும் ஒரு முறை காபி வந்தது. அன்று அங்கேயே சாப்பிடும்படி திருமதி ஹேமா சுந்தரம் வற்புறுத்த, முடியாதவர்களாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டோம். அன்று மாலையே நான் சென்னை திரும்பவேண்டிய அவசரம் இருந்ததால், மெல்ல கிளம்ப ஆயத்தமானோம்.

*****

"நிறைய பேர் வந்து அவரோட புக்ஸையெல்லாம் ரிப்ரிண்ட் போட கேக்கறா.. அப்பா இருந்தவரைக்கு, அவர்தான் இதையெல்லாம் பார்த்துப்பார். அவர் போனப்புறம், என்னக் கேக்கறா.. எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு. பல புக்ஸ் இப்ப படிக்கறவாளுக்கு கிடைச்சா எவ்வளவு நன்னா இருக்கும்னு நினைச்சுப்பேன்.

இன்னிக்கு புக்கெல்லாம் எவ்வளவு விலை போடறா.. பார்க்கும்போதே பயமா இருக்கு. அவர் காலத்துலலேயே, அதிக வெலை புக்கெல்லாம் பார்த்து, எப்படி வாங்கிப் படிப்பா, இப்படி வெல வெச்சுருக்கே அப்படிம்பார். கொண்டு வரணும், கொறைச்ச வெலைல.. எல்லாரும் படிக்கறா மாதிரி.."

*****

கிளம்பும்போது, ஆதவனின் மாமியார், தட்டில், மட்டை தேங்காயை வைத்து நின்றுகொண்டிருந்தார். சாந்தமான முகம். அற்புத மாப்பிள்ளையைப் பெற்ற ஆனந்தம். அதைவிட அவர் புகழை இன்று தமிழ் உலகம் புரிந்துகொண்டிருப்பது கண்டு ஆனந்தப்படும் நெஞ்சம்.

"ஆத்து மரத்துல காய்ச்ச தேங்கா இது.." என்றார்.

தட்டைக் கொடுக்க வந்தவரை, கிழக்கே பார்த்து நிற்கச் சொன்னேன். பக்கத்தில் திருமதி ஹேமா சுந்தரத்தையும் நிற்கச் சொன்னேன். நான் யார் கால்களிலும் விழுபவனல்ல. அன்று விழுந்து வணங்கவேண்டும்போல் தோன்றியது. என் வழக்கப்படி நான்கு முறை சேவித்தெழுந்தேன். கண்கள் கலங்குவதை, என்னாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அன்பு மயமான ஆதவன்... - திருப்பூர் கிருஷ்ணன்

ஆதவன் துங்கபத்திரை நதிச் சுழலில் சிக்கிக் காலமான செய்தி வானொலியில் அறிவிக்கப்பட்டது. ஆழ்ந்த இலக்கியவாதிகள் பலரையும் அதிர்ச்சியிலும் கடும் சோகத்திலும் ஆழ்த்திய செய்தி. என் இனிய நண்பரும் எழுத்தாளருமான பால்நிலவன், அந்த வானொலிச் செய்தியைக் கேட்டு, அளவற்ற சோகத்தால் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தார். நா.பா.வை அந்தச் செய்தி மனமுடையச் செய்தது. ஆதவனைத் தம் தம்பி போலக் கருதி அன்பு செலுத்தியவர் அவர். ஆதவனின் மேல் மிகுந்த நட்புக்கொண்டிருந்தவரான இந்திரா பார்த்தசாரதி துயரவசப்பட்டார். எனக்கு உலகம் வெறுத்தது. ஆதவனே போய்விட்டாரே. இனி என்ன? அகால மரணம். அதிலும் விபத்து. அவரும் நானும் கொண்டிருந்த நட்பு ஒரு துளிப் பொறாமைக் களங்கமோ, சொந்த ஆதாயப் பின்னணிகளோ சிறிதும் கலவாத, ஆத்மார்த்தமான, அன்புமயமான நட்பு. எந்தச் சோகமானாலும் பகிர்ந்துகொள்ளக்கூடிய உற்ற நண்பர்களையே நாம் இழக்க நேர்கிற சோகம்தான் எத்தனை கொடுமையானது!

காலமான ஓரிரு நாட்களில் அம்பத்தூரிலிருந்து லா.ச.ரா. என்னைத் தேடி வந்தார். விபத்தில் மரணமடைந்த செய்தியை நானும் அவரும் பகிர்ந்துகொண்டோம். சற்று நேரம் மௌனமாக இருந்தார் லா.ச.ரா. என் மேசைமேல் ஜே.கிருஷ்ணமூர்த்தி படம் ஒன்று வைத்திருந்தேன். அந்தப் படத்தை விரலால் தட்டியவாறே சொன்னார்: "அவனும் அழகனய்யா!"

ஆமாம். அழகான எழுத்தாளர்கள் என்று நா.பா. தொடங்கிச் சிலரைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் கட்டாயம் இடம்பெறக் கூடியவர் ஆதவன். அழகானவர் மட்டுமல்ல. அழகாகவும் சீராகவும் உடையணிபவரும் கூட. மடிப்புக் கலையாமல் இஸ்திரி போடப்பட்ட பான்ட். அதன் நிறத்திற்குப் பொருத்தமான வண்ணத்தில் சட்டை. சட்டையை "இன்" செய்திருப்பார். பளபளவென்று பாலீஷ் போடப்பட்டு மினுமினுக்கும் ஷ¥க்கள். அவரைக் கழுத்தில் கட்டிய டையோடும் நிறையப் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்க்கும் போது ஆசிரியர், பெற்றோர் கட்டளைக்கு அடங்கி ஒழுங்காக டிரஸ் செய்துகொள்ளும் கான்வென்ட் பையன் ஞாபகம் வரும். தலையைச் சீராக குழப்பமின்றி வாரியிருப்பார்.

ஆதர்ஸ் கில்ட் கூட்டங்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வந்தன. ஒரு வருடம் தில்லியில். மறு வருடம் வேறு ஏதாவது ஒரு நகரத்தில். எனவே ஆதர்ஸ் கில்டில் உறுப்பினராக இருந்த நான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லி போக நேர்ந்தது. தில்லி போன போதெல்லாம் இந்திரா பார்த்தசாரதி, கே. ஸ்ரீனிவாசன், கஸ்தூரிரங்கன், என்.எஸ்.ஜெகந்நாதன், கிருத்திகா, தில்லி ராஜாமணி, தம்பி சீனிவாசன், வாஸந்தி என்று தில்லிவாழ் எழுத்தாளர்கள் பலரையும் சந்தித்து மகிழக்கூடிய வாய்ப்புகள் நிறையக் கிடைத்தன.

தவறாமல் ஆதர்ஸ் கில்ட் கூட்டங்களுக்கு வந்துசொண்டிருந்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் நீல பத்மநாபன். நான், நீல பத்மநாபன், வெங்கட் சாமிநான், தம்பி சீனிவாசன், ஆதவன் எல்லோருமாகப் புல்வெளியில் அமர்ந்து ஒரு முறை நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வருகிறது. ஏதோ காராசாரமான இலக்கியப் பரிவர்த்தனை. அப்போது கூட சமநிலை குலையாமல் மௌனம் காத்தார் ஆதவன்.

அது தான் ஆதவன். அவர் அமைதியிழந்து கத்தி கூச்சலிட்டு நான் பார்த்ததே இல்லை. நிதானம், பொறுமை, இணக்கம், அனுசரணை போன்ற உயர்ந்த குணங்கள் அவரிடம் இயல்பாகவே இருந்தன.

நேஷனல் புக் டிரஸ்டில் வேலையாயிருந்த அவரை, அவரது கடைசிக் காலங்களில் பெங்கéருக்கு மாற்றினார்கள். அந்த மாறுதல் அவருக்குப் பிடிக்கவேயில்லை. தன் மனைவிக்கும் அந்த மாறுதல் பிடிக்கவில்லை என்றும் ஆனால் பெங்கéர் போகாமல் வேறு என்ன செய்வது என்றும் என்னிடம் அவர் அலுத்துக்கொண்டார். "வாழ்க்கைப் போக்கில் நேரக்கூடிய விஷயங்களை ஜீரணித்துக்கொள்ள வேண்டியதுதான்" என்று அவரை ஆறுதல்படுத்தினேன். மனமில்லாமல் பெங்கéர் போன அவர் பிறகு பெங்கéரிலிருந்து உயிருடன் திரும்பவில்லை.

அவரது உவினர்கள் சென்னையில்தான் இருந்தார்கள். சென்னை வரும்போதெல்லாம் என்னைச் சந்திக்க அவர் தவறியதில்லை. ஏதோ ஒருமுறை அப்படிச் சந்திக்காமல் போனது பற்றி அளவற்று வருந்தி அவர் கடிதம் எழுதியதாக ஞாபகம்.

அவரும் நானும் மணிக்கணக்கம்ல் பேசுவோம். பூ மாதிரி உணர்வுகள் அவருக்கு. மென்மையும் பிரியமுமாய் உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுக்கிறார்போல் பேசுவார். அவருடன் இருக்கும்போது உலக வாழ்க்கை பற்றி மனத்தில் நம்பிக்கை கலந்த ஒரு பாதுகாப்புணர்வு ஏற்படும்.

தீபத்தில் அவர் "காகித மலர்கள்" எழுதியபோது கையெழுத்துப் பிரதியில் ஒரு பாரா பாலியல் கலந்து காணப்பட்டது. ஜானகிராமன் போலத்தான் அவர் பாலியல் பிரச்னைகளை எழுதுவாரேயல்லாமல், கிளர்ச்சி நோக்கில் எழுதுபவர் அல்ல. என்றாலும் நா.பா. அந்தப் பாராவை பிரசுரிக்க விரும்பவில்லை. அந்தப் படைப்பு புத்தகமாக வரும்போது வேண்டுமானால் அவர் வெளியிட்டுக்கொள்ளலாம் என்றும் கூறி நா.பா. அந்த வரிகளை எடிட் செய்துவிட்டார். "நா.பா. கருத்துச் சரிதான்" என்று கடிதம் எழுதியிருந்தார் ஆதவன். நா.பா., கஸ்தூரிரங்கன் இருவர் மேலும் அவ்வளவு மரியாதை அவருக்கு. தமது ஒரு புத்தகத்தை கஸ்தூரிரங்கனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

தீபத்தில் அவர் எழுதிய நிழல்கள் என்ற கதையைப் பல்லாண்டுகள் கழித்து ஆனந்த விகடனுக்கு, தீபத்தில் முன்னரே வெளிவந்தது என்று குறிப்பிடாமல் அனுப்பிவிட்டார். விகடனிலும் அது பிரசுரமாகியது. பிறகு விகடனிலேயே ஏற்கனவே வெளிவந்த கதையை விகடனுக்கு அவர் கொடுத்தது தவறு என்று கண்டனக் குறிப்பும் வெளியாயிற்று. செய்தது தவறு என்பதுதான் என் கருத்தும். ஆனால் அவர் ஏன் அவ்விதம் நடந்துகொண்டார் என்று தெரியவில்லை.

தமிழ் இலக்கியத்தை நிரந்தரமாக அலங்கரிக்கக்கூடிய பல மணிமணியான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். கணையாழியில் தொடராக வெளிவந்த அவரது "என் பெயர் ராமசேஷன்" என்ற நாவல் பாலியலை உளவியல் கண்ணோட்டத்தில் ஆராயும் உயர்ந்த நாவல். நா.பா. தினமணி கதிரில் ஆசிரியராக இருந்தபோது, தினமணியின் மாத வெளியீடான கதைக் கதிரில் ஒரு நாவல் எழுதினார். கதிரில் பவுன் மூட்டை என் தலைப்பில் ஒரு நல்ல சிறுகதை எழுதினார்.

சுறுசுறுப்பாக நிறைய எழுதுபவர். இன்னும் நிறைய எழுதியிருக்க வேண்டியவரும் கூட. கொஞ்சம் ஆயுள் மட்டும் கிட்டியிருந்தால் தமிழ் இலக்கியம் பல உயர்ந்த சிகரங்களை அடைய அவர் எழுத்து உதவியிருக்கும். என்ன செய்வது? விதியின் தீர்ப்பு வேறு மாதிரி.

காலமான பிறகாவது அவருக்கு சாகித்ய அகாதமி பரிசு கொடுக்கப்பட்டது ஒரு சின்ன ஆறுதல்.

இப்போதும் எழுத்துலகில் நிறைய இளைஞர்களைப் பார்க்கிறேன். நுணுக்கமாக எழுதுபவர்கள், பெரும் மேதாவிலாசம் இருந்தாலும் அன்பும் அடக்கமும் உடையவர்கள்...இத்தகைய இளைஞர்களைப் பார்க்கிறபோது ஆதவனைப் பற்றிய ஞாபகம் வந்துகொண்டே இருக்கிறது.

ஆதவன் - பாகம் இரண்டு

தவிர்க்க முடியவில்லை -ஆதவன்

'நானும் என் எழுத்தும்' என்று சொல்லிக் கொள்ள முற்படும்போது, இந்தச் சொற்றொடரில் பெருமையுடன் கூடவே ஓர் ஏளனத்தின் சாயலும் கலந்து தொனிப்பதாக எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது - 'இவனும் இவன் மூஞ்சியும்' என்று சொல்வதைப் போல. வேறு சிலரும் இதே விதமான அபிப்ராயந்தான் கொண்டிருக்கிறார்களென்பதை நான் அறிவேன் - என் மூஞ்சியைப் பற்றியும், என் எழுத்தைப் பற்றியும். இப்படி ஒரு பிரகிருதியா! இப்படி ஒரு எழுத்தா! என்று பரிகாசத்துடன் சிரித்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கொடுப்பானேனென்று. பல சமயங்களில் இவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன். "யூ ஆர் ரைட், ஆஸ் யூ ஸே - இந்த - என்ன சொன்னீர்கள்?"

"எமோஷனல் கான்ஃப்ளிக்ட் சரியாக Build up ஆகவில்லை.

"ஆமாம், வாஸ்தவந்தான்."

"ஆனால் Craftsmanship நன்றாக இருந்தது."

"அப்படி நினைக்கிறீர்களா நீங்கள்?"

"Superb."

நான் சந்தோஷப்படுகிறேன். அவரும் சந்தோஷப்படுகிறார் - வம்புதும்பு செய்யாமல் சொல்வதை அப்படியே ஒத்துக் கொள்கிறவர்களைக் கண்டால் யாருக்குத்தான் சந்தோஷமாயிருக்காது? நான் அவருடன் ஒத்துப் போகும்போது, அவருடைய கூர்மையான ரசனையும், எதிலும் எளிதில் மிரண்டுவிடாத பக்குவ நிலையும் நிரூபணமாகின்றன. உறுதிப்படுகின்றன. அவர் மிரளுகிறவரில்லை. அதே சமயத்தில் குறுகிய பார்வையுடையவருமில்லை. பாராட்டுக்குரிய எந்தச் சிறு அம்சத்தையும் பாராட்டாமல் விடுகிறவரில்லை. என் சிருஷ்டி அவருடைய பார்வைக்கு வந்ததும், அவரால் படிக்கப்பட்டதும் விமரிசிக்கப்பட்டதுமே என் அதிர்ஷ்டந்தானே? பாக்கியந்தானே? இதுபோன்ற நல்லெண்ணமும் விஷய ஞானமும் உள்ளவர்களுடைய சிநேகிதம் என் எழுத்து வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் கிட்டியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! அப்போது நான் சிறிதும் ஒச்சமில்லாத - எந்த நோக்கிலிருந்து பார்த்தாலும் திருப்தியளிக்கக்கூடிய - சிறந்த கதைகளை எழுதியிருக்கக் கூடுமல்லவா?

இன்னொரு பக்கத்தில், நான் சிறந்த கதைகளைத்தான் எழுதுகிறேனென்று தீர்மானமாக நம்புகிற - என் எழுத்துக்களின்மேல் மாறாத ஈடுபாடும் விசுவாசமும் கொண்ட - வேறு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். பல நாட்களாக என் எழுத்துக்களைப் படித்து வந்து, பிறகு திடீரென்று ஒருநாள் என்னை நேரில் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய் என் கையைப் பிடித்துக் குலுக்கி, சந்தோஷ மிகுதியால் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறி, விலையுயர்ந்த முத்துக்கள் என் வாயிலிருந்து உதிரப் போகின்றனவென்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் என் முகத்தைப் பக்தி பரவசத்துடன் பார்த்து, என்னைத் தவிப்பிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சந்திப்புகளினால் என் அதிருப்தியும் அவநம்பிக்கையும் சற்றே விலகுவது போலிருக்கிறது. இவர்களுக்காக - இந்தப் பரிசுத்தமான அன்புக்காகவும் சந்தோஷத்துக்காகவும் - நான் எழுத வேண்டும், நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

எப்படியிருந்தாலென்ன? முதன்முதலில் நான் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப் போடும் தோசைகளைச் சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக் கட்டும் குழந்தைகளைப் போல என் பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும் சப்புக் கொட்டிக்கொண்டு படிக்க ஆவலுடன் ஒரு ரசிகர் குழாம் இருக்கவில்லை. நான் தனியாக - கவனிக்கப்படாதவனாக - இருந்தேன். இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். ஆனால், இந்தத் தனிமை மற்றவர்களும் நானும் மிகவும் உணர்ந்த ஒன்றாக - சில சமயங்களில் ஒரு பாசாங்காகவே - மாறிவிட்டது. 'நான் தனி' என்று சொல்லிக் கொள்வதும் பிறரால் சுட்டிக்காட்டப்படுவதும் எனக்கு ஒரு பெருமைக்குரிய விஷயமாகிவிட்டது. முன்னெல்லாம் இப்படியில்லை. நான் தனி என்பதைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளத் தெரியாத ஒரு நிலையில், என்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து சில அம்சங்களில் சில விதங்களில் மாறுபாடுகளும் குறைபாடுகளும் உள்ளனவாக இருந்தது எனக்கு மிகவும் கவலைக்குரிய விஷயமாகத் தோன்றுகிற நிலையில் - நான் இருந்தேன். படிப்பிலும் சராசரியாக, விளையாட்டுக்களிலும் தைரியமும் சாமர்த்தியமும் இல்லாத காரணத்தால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டவனாக, என்னையே எனக்கு நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினாலும் ஏக்கத்தினாலும் திடீரென்று ஒருநாள் நான் எழுதத் தொடங்கினேன். எனக்கென்று ஒரு புதிய உலகம் - தனி உலகம் - நிர்மாணிக்கத் தொடங்கினேன். இந்த உலகத்தில் நான்தான் ராஜா; நான் வைத்ததுதான் சட்டம்!

பள்ளி நாட்களிலேயே என் தனிமை தொடங்கி விட்டது. எழுத்தும் தொடங்கி விட்டது. ஏழாம் வகுப்பில் படிக்கும்போது, நானும் என் சிநேகிதன் ஒருவனுமாகச் சேர்ந்து, 'அணுகுண்டு' என்றொரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினோம். எங்களிருவருக்கும் பெயரில் ஒற்றுமை - சுந்தரம்; தனிமையிலும் ஒற்றுமை. ஆனால் அவன் தனிமை வேறு மாதிரியானது. அது மற்றவர்களைவிட நிறைய மார்க்குகள் வாங்கிக்கொண்டு, மற்றவர்களுடன் சரிசமமாகப் பழக விரும்பாத அல்லது பழக இயலாத கெட்டிக்கார மாணவனின் தனிமை. என் தனிமையோ, சாமர்த்தியக் குறைவு காரணமாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததால் விளைந்த தனிமை. எப்படியோ, எங்களிருவரின் தனிமையுமாகச் சேர்ந்து, அணுகுண்டைத் தோற்றுவித்தது. ஒன்பதாம் வகுப்பில் சுந்தரம் கலைப்பிரிவும், நான் விஞ்ஞானப் பிரிவும் எடுத்துக்கொண்டு வெவ்வேறு செக்ஷன்களில் பிரிந்து செல்லும் வரையில் அணுகுண்டு ஜாம்ஜாமென்று நடந்தது.

என் எழுத்து, பள்ளி நாட்களிலேயே தொடங்கிவிட்டதென்றாலும், நான் உண்மையிலேயே ஒரு எழுத்தாளனாக உருவானது 1962ல்தான். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். முதன்முதலாகக் காதலித்தேன். அந்த அனுபவம் என்னுள்ளே ஒரு புதுமையான கிளர்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. அதுவரையில் ஏதோ எழுதித் தள்ள வேண்டுமென்ற வெறியும் ஆசையும் இருந்ததே தவிர, எதை, எப்படி எழுத வேண்டுமென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த அவள் என்னைப் பார்த்துச் சிரித்ததும், எனக்காகக் காத்திருந்து என்னுடன் பேசியவாறே நடந்து வந்ததும், திடீரென்று உலகமே ஒரு புதிய ஒளியுடன், புதிய அர்த்தத்துடன் என் கண்களுக்குத் தென்படத் தொடங்கியது. ஏட்டில் படிக்கும் மிகப் பிரமாதமான விஷயங்களும் கூட, வாழ்க்கையில் சில நிஜமான கணங்களுக்கு முன்னால் எவ்வளவு அற்பமானவையென நான் உணர்ந்தேன். எதை எழுதுவது என்ற பிரச்சினை போய், எதை எழுதாமலிருப்பது என்பது என் பிரச்சினையாகிவிட்டது. என் எழுத்து மலருவதற்குத் தன்னையறியாமல் பெரும் உதவி செய்த, ஒரு காரணகர்த்தாவாகவே இருந்த அவள், இன்று எங்கேயிருக்கிறாளோ அறியேன். அவள் கன்னடக்காரி; இந்த வரிகளை அவள் படிக்க சான்ஸ் இல்லை. பிற்பாடு என் வாழ்வில் குறுக்கிட்ட இன்னொரு பெண்ணும் தமிழ் தெரியாதவளாக, என் கதைகளைப் படிக்காதவளாகவே இருந்தாள்.

கல்லூரி வராந்தாவில் முளைவிட்ட என் முதல் காதல், ரெஸ்டாரெண்டுகளிலும் சினிமா தியேட்டர்களிலும் விகசித்து மலருவதற்கு வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ஆனால், அதன்பின் நான் எழுதிய கதைகளில் வரும் ஆண்களும், பெண்களும், ரெஸ்டாரண்டு, சினிமா தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன், ரயில் முதலிய எல்லா இடங்களிலும் தடையில்லாமல் சந்தித்துக் கொண்டார்கள். அளவளாவினார்கள். எழுத்தாளனாக இருப்பதில் என்ன செளகரியம் பாருங்கள் - 'ரெஸ்டாரண்டும் சினிமாத் தியேட்டரும் வராத கதை ஏதாவது நீ எழுதியிருக்கிறாயா?' என்று என் சென்னை நண்பன் ஒருவன் போன வருடம் என்னைக் கேட்டான். கெட்டிக்காரன்தான். என்ன செய்வது, நான் புழங்கிய சூழ்நிலைகளையும் இடங்களையும் வைத்துத்தானே என்னால் எழுத முடியும்? என் வாழ்வின் பெரும் பகுதி ரெஸ்டாரண்டுகளிலும் சினிமா தியேட்டர்களிலும் கழிந்திருக்கிறது. என் பழைய நண்பன் சுந்தரம் ஐ.ஏ.எஸ் ஆபீசரான பிறகு என்னைச் சந்தித்ததும் ஒரு ரெஸ்டாரண்டில்தான். "ஹலோ, அணுகுண்டு!" என்று நாடக பாணியில் கூறியவாறு அவன் என்னை நோக்கிக் கையை நீட்டியபோது, அவன் குரலின் தொனியும் தோரணைகளும் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவன் நீட்டிய கரத்தைப் பிடித்து நான் குலுக்கினேன். "ஹலோ" என்றேன். எனக்கும் அப்போது கொஞ்சம் திமிரும் கர்வமும் உண்டாகியிருந்தது. என் கதைகள் ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கியிருந்தன. அவன் ஏதோ சாதித்திருந்தானென்றால், நானுந்தான் ஏதோ சாதித்திருந்தேன். நான் இன்னும் கதைகள் எழுதிக் கொண்டிருப்பதாகத்தான் கேள்விப்படுவதாகச் சொன்னான். நான் குற்றத்தை ஒப்புக்கொண்டேன். சின்னப் பையன்களாக இருக்கும்போது செய்யப்படும் ஒரு அசட்டுத்தனத்தை, நான் இன்னமும் செய்து கொண்டிருப்பதாக அவன் அபிப்ராயப்படுவது போலிருந்தது. 'ஓ! சிலர் எவ்வளவு வயதானாலும் முதிர்ச்சி பெறுவதில்லை!' என்று அவன் என்னைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். நானும் அவனைப் பற்றி அதையேதான் நினைத்தேன் என்பது அவனுக்குத் தெரியுமோ என்னவோ?

சுந்தரம் என் கதைகளைப் படித்திருந்தானோ என்னவோ, ஆனால், வேறு பலர் படிக்கத் தொடங்கியிருந்தார்கள். என் பெயரைக் குறித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். விகடனில் என்னுடைய கதைகள் பல 'முத்திரை' பெற்று வெளிவந்தன. "இவர்தான் ஆதவன், ஆனந்தவிகடனில் முத்திரைக் கதைகள் எழுதுகிறவர்" என்று சிலர் பக்தியுடனும் சிலர் குத்தலாகவும் கூறத் தொடங்கியிருந்தார்கள். மனித மனத்தின் நெளிவு சுளிவுகளையும் வக்கிரகங்களையும் புரிந்துகொள்ள இந்த அபிப்ராயங்கள் எனக்கு மிக உதவியாக இருந்தன.

விகடனில் என் கதைகள் வெட்டுப்படாமல் முழுமையாகப் பிரசுரமான ஒரே காரணத்தால் நான் தொடர்ந்து என் கதைகளை அவர்களுக்கு அனுப்பினேன். பிறகு தீபம் வரத்தொடங்கியது. நான் தீபத்தில் எழுதலானேன். என் எழுத்து வாழ்வின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டமும், தீபத்தின் தோற்றமும் ஒருசேர நிகழ்ந்தது என் அதிர்ஷ்டந்தான். ஆனால், தீபத்தில் இடம்பெறத் தக்க அளவு தகுதிபெற்று விட்டதற்காக மகிழ்ச்சியடைவது போலவே, விகடனில் எழுதத் தொடங்கியதற்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுவதால் ஒரு டிஸிப்லின் வருகிறது. ஒரு பொறுப்புணர்ச்சி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த டிஸிப்ளின் எழுத்தாளனுக்கு அவசியமென்று நான் நினைக்கிறேன். வரையரையற்ற சுதந்திரம், அளவுக்கு மீறிய செல்லத்தைப் போலத்தான் ஒரு எழுத்தாளனைக் கெடுத்து விடுகிறது. பெரிய பத்திரிகைகள்தான் எழுத்தாளர்கள் பலரைக் கெடுத்திருப்பதாகக் குமுறுகிறவர்கள், சிறிய பத்திரிகைகளில் 'செல்லம்' கொடுக்கப்பட்டுக் குட்டிச்சுவராகப் போன எழுத்தாளர்களை ஏனோ நினைத்துப் பார்ப்பதில்லை. அல்லது இவர்களைக் குட்டிச் சுவர்களாக ஒப்புக் கொள்வதில்லை.

'தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு' என்ற என் கதை விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமான பொழுது, சக எழுத்தாளர் ஒருவர், "முத்திரைக்காகவென்றே எழுதியிருக்கிறீர்கள்" என்று அபிப்ராயம் தெரிவித்தார். முத்திரைக்காக ஏதோ ஃபார்முலா இருப்பது போலவும், அந்த ஃபார்முலாவை நான் சாமர்த்தியமாகக் கையாண்டிருப்பது போலவும் ஒரு அர்த்தம் அவர் பேச்சில் தொனித்தது. தீபத்தில் நான் எழுதிய சில நல்ல கதைகளை யாரும் படித்ததாகக் கூடக் காட்டிக் கொள்வதில்லை. ஆனால், அதிக சன்மானம் பெற்று இப்படியொரு கதை வெளியானவுடன், பலர் மிகவும் மெனக்கெட்டு என்னிடம் அந்தக் கதை ஏன் நன்றாக இல்லை என்று விவரிப்பதற்குப் பிரயாசை எடுத்துக் கொண்டார்கள். இவர்களுக்கெல்லாம் என் நன்றி. என்னிடம் கதையெழுத எளிய ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கதையையும் மிகவும் யோசித்து, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எழுதுகிறேன். தாஜ்மகால் கதை என்னுடைய தலைசிறந்த முயற்சியென்று நானும் நினைக்கவில்லை. ஆனால், அது ஏதோ ஏமாற்று வித்தை என்பது போலச் சிலர் கண்ணைக் சிமிட்டிச் சிரிக்கும் போது, எனக்கும் இவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. என்னைக் கறுப்பாக நிரூபிப்பதன் மூலம் தம்மை வெளுப்பாக நிரூபித்துக் கொள்ள முயலும் சாகஸம் தெரிகிறது. என்னுடைய அர்த்தங்களை உண்மையாக்க முயலும் ஏக்கமும் ஆதங்கமும் தெரிகிறது. என்னுடைய அர்த்தங்களை மறுப்பதன் மூலமாகத்தான் இன்னொருவருடைய அர்த்தங்கள் உறுதிப்படுகின்றனவென்றால் - அந்த அளவுக்கு அவை பலவீனமானவையென்றால் - பாவம்! மறுத்துக் கொள்ளட்டும்; எனக்கு என் தேடல்தான் முக்கியம்.

ஒவ்வொரு கதையும் நான் தவிர்க்க முடியாமல் ஈடுபடும் ஒரு தேடல். என்னை நானே உட்படுத்திக் கொள்ளும் ஒரு பரீட்சை. ஒரு பிரச்சினை, ஒரு கருத்து, ஒரு அனுபவம் அல்லது ஒரு உணர்ச்சி - இவற்றின் சொல் உருவாக்கம், சித்தரிப்பு, விவரணை, பகிர்ந்து கொள்ளல், ஆகியவற்றில் எனக்குள்ள திறமையின் பரீட்சை, என்னையுமறியாமல் என்னுள்ளே ஒளிந்திருக்கக்கூடிய ஆழங்களின், சலனங்களின் தேடல் என் தேடல்கள் நிறைவு பெறலாம், பெறாமலும் போகலாம். பரீட்சையில் நான் வெற்றி பெறலாம், பெறாமலும் போகலாம். பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டதாக எனக்கு உறுதியேற்படும் சமயங்களில், மற்றவர்கள் இந்த வெற்றியை அங்கீகரிப்பதோ அல்லது அங்கீகரிக்க மறுப்பதோ என்னைப் பாதிக்காத, நான் கவலைப்படாத விஷயங்கள். அதேபோல பரீட்சைகளில் நான் தோல்வியடையும்போது, என் தேடல்கள் நிராசையடையும்போது, மற்றவர்களின் எந்தவிதமான புகழ்ச்சிகளும் மதிப்பெண்களும் இந்தத் தோல்விகளை வெற்றிகளாகவோ, நிராசையைச் சந்துஷ்டியாகவோ மாற்றிவிடப் போவதில்லை. ஒவ்வொரு கதையை எழுதிய பின்பும் நான் என்னையும் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் முன்னைவிட நன்றாகப் புரிந்துகொள்ளவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.

தாஜ்மகால் கதையை எழுதிய பிறகு, கணவன் - மனைவி சமத்துவம் என்பது ஒரு இலட்சிய உருவகம் தானென்பதை நான் புரிந்துகொண்டேன். ஏதோ ஒரு கட்டத்தில் ஒருவரிடம் மற்றவர் பணியும்போது தான் அமைதியும் அந்நியோந்நியமும் உண்டாகிறது. இந்த நிலை ஏற்படும்வரையில் இருவருக்குமிடையே ஒரு மெளனமான போராட்டம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். தாஜ்மகால் கதையில் மனைவி பணிய விரும்புகிறாள். கணவன் இதை விரும்பவில்லை. அதே சமயத்தில் தான் பணியவும் அவன் தயாராக இல்லை. கடைசியில் அவள் விருப்பத்துக்கு அவன் பணிகிறான். அவள் பணிவை ஏற்றுக் கொள்கிறான் - தன் காலைப் பிடித்துவிடச் சொல்கிறான். வெற்றி யாருக்கு? மனைவிக்குத்தானே! அந்த நயம் சிலருக்குப் புரிந்தது. சிலருக்குப் புரியவில்லை. பலர் கண்களுக்கு, மனைவி கணவனுடைய காலைப் பிடித்துவிடும் இமேஜ்தான் பூதாகாரமாகத் தெரிந்தது. ஒருவிதக் குற்றமனப்பான்மை காரணமோ என்னவோ? மரபுக்கு வால்பிடிக்கும் இக்கதை முதூதிரை பெற்றதில் ஆச்சரியமிலலையென்று இவர்கள் நினைத்தார்கள்.

ஒரு கதையின் சதையும் உயிரும் போன்ற தொனிகளையும் நிறங்களையும் பாவங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்து, உள்ளேயிருக்கும் எலும்புக் கூட்டின் ஜாயிண்ட்டுகளை எண்ணுமளவுக்கு - சங்கேதங்களும் குறியீடுகளும் இல்லாத இடங்களிலெல்லாம் இவை இருப்பதாக நினைத்து மிரளும் அளவுக்கு - இலக்கிய ஞானம் அபரிமிதமாகச் செழித்து வளர்ந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயந்தான். ஆனால், இத்தகைய ஞானஸ்தானம் பெறாத சராசரி மக்களுக்காகத்தான் நான் கதைகள் எழுதுகிறேன். பலர் நினைப்பது போல இவர்கள் அப்படியொன்றும் சராசரியானவர்களல்லவென்பதை உணர்ந்து, நான் சொல்ல விரும்புபவற்றை இவர்களுக்குச் சொல்கிறேன். அதே சமயத்தில் இவர்கள் விரும்புகிறவற்றையெல்லாம் சொல்லவும் நான் முயல்வதில்லை. எதை எழுதுகிறேன் என்பதையும், எப்படி எழுதுகிறேன் என்பதையும் நான்தான் தீர்மானிக்கிறேன்.

ஒரு விமரிசகர் என் கதையைப் பாராட்ட, அதே கதையை என் தாயாரோ, எதிர்வீட்டு இளைஞனோ, ஆபீஸில் என்னுடன் வேலை செய்கிறவரோ சுமாராயிருக்கிறதென்று சொன்னால், பின் சொன்னவர்களின் அபிப்பிராயங்களை நான் அலட்சியப்படுத்துவதில்லை. எனக்கு லேபிள்கள் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம். அவர்களுக்குள்ளே ஆதாரமாக, அடிப்படையாக இருக்கும் சில உணர்வுகளையும் ஞாபகங்களையும் வருடுவதிலும் மீட்டுவதிலும்தான் எனக்கு அக்கறை.

எழுத்து எனக்கு ஒரு பயணம். பூடகமாகவும் மர்மமாகவும் எனக்குச் சற்றுத் தொலைவில் எப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்றைக் கிட்டப் போய்ப் பார்க்கும் ஆசையினால், பிரத்யட்ச உலகத்தினுள்ளே சதா இயங்கிக் கொண்டிருக்கும் பல சூட்சுமமான உலகங்களை வெளிக்கொணரும் ஆசையினால், அல்லது எனக்கென்று ஒரு புதிய உலகம் நிர்மாணித்துக் கொள்ளும் ஆசையினால், நான் மேற்கொண்டுள்ள ஒரு பயணம். நான் செல்கிற பாதையையும் திசையையும் பற்றி எனக்கே ஒரு குழப்பமில்லாத நிச்சயமும் தெளிவும் இருக்கிறவரையில்தான், என் பயணம் எனக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, பயனுள்ளதாக அமையும். ஏதோ ஒரு கட்டத்தில் என்னைப் பார்த்துப் பத்துப் பேர் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் என்பதற்காக, அதே கட்டத்தில் தேங்கிவிட நான் விரும்பவில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் நான் திசை திரும்பும்போது, இரண்டு பேர் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்பதற்காக நான் திசையை மாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கும் மட்டத்தினருக்கும் இணக்கமான ஒரு வேஷத்தை அணிந்துகொண்டு, அவர்களுடைய தர்பாரில் ஆஸ்தான எழுத்தாளனாகக் கொலுவிருப்பதில் எனக்குச் சிரத்தையில்லை. எழுத்து எனக்கு ஒரு அழகிய மீட்சி. அதை ஒரு பந்தமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.

கஷ்டப்பட்டுக் கதைகள் எழுதியது போக மிஞ்சும் நேரத்தை, நான் ஒரு சாதாரண மனிதனாக, வேறு சாதாரண மனிதர்களுடன் அமைதியாகக் கழிக்கவே விரும்புகிறேன். மண்ணின் ஸ்பரிசத்திலும் வாசணனயிலும் இன்பமடையும் குடியானவன்போல, இந்தச் சாதாரண மக்களுடன் கலந்து பழகும்போதுதான் எனக்கு இன்பமுண்டாகிறது. இலக்கியக் கூட்டங்கள், குழுக்கள், சர்ச்சைகள் இவையெல்லாம் எனக்குச் சலிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சிறையிலிருந்து மீளும் முயற்சியில் இன்னொரு சிறையில் போய்ச் சிக்கிக் கொண்ட உணர்வு ஏற்படுகிறது. இலக்கியச் சிறையில் சமர்த்தாக ஒடுங்கிக் கொண்டு, சூப்பிரண்டுகளிடமும் வார்டர்களிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் பொறுமையும் சாதுரியமும் சிலருக்கு இருக்கிறது. எனக்கு இது இல்லை. நான் எப்பொழுதும் சிறைக் கதவுகளை உடைத்துக் கொண்டும் சுரங்கங்கள் வெட்டிக் கொண்டும் மதிற் சுவரேறிக் குதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்; எனக்கே இலக்கியச் சிறையின் காவல்காரர்களின் துப்பாக்கித் தோட்டாக்களைச் சம்பாதித்தவாறு இருக்கிறேன். சுடட்டும், நிறையச் சுடட்டும். ஒருநாள் நான் நிச்சயம் தப்பித்துக் கொண்டு போகத்தான் போகிறேன். என் பாதை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் என்னுடன் வரலாம். நான் நிர்மாணிக்கப் போகும் உலகத்தில் உங்களுக்குச் சிரத்தையிருந்தால் நீங்களும் என்னுடன் கலந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் விரும்பும் உலகங்களை என் மூலம் நிர்மாணிக்க, தயவுசெய்து முயலாதீர்கள். அது என்னால் இயலாத காரியம். என் பாதையின் சில கட்டங்கள் பிடிக்காமலிருக்கலாம். ஆனால், எனக்குச் சரியென்று தோன்றுகிற பாதையில்தான் நான் செல்ல முடியுமென்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

சின்னப் பையனாக இருக்கும்போது, புதுச் சட்டை அணிந்தவுடன் எனக்குச் சில நாட்களுக்கு ஒரே கூச்சமாக இருக்கும். யாராவது கவனிக்க வேண்டும் போல் இருக்கும்; ஒருவரும் கவனிக்காமலிருந்தால் தேவலை போலவும் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் எதிலும் புதுமை தொடங்கி இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகிறது. எழுதத் தொடங்கி பத்து வருடங்களுக்கு மேலாகிறது. சட்டைகளையாவது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் புழங்க வேண்டியிருக்கும் நிர்ப்பந்தம் காரணமாக, என்னைச் சுற்றியிருப்பவர்கள் அணிவதால், நானும் அணிவதாகச் சொல்லலாம். ஆனால், எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக் கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப் போல் அல்ல. குச்சு நாய்க்குட்டியின் சுறுசுறுப்பையும் புதிதாகப் போட்டுக் கொண்ட கொண்டையையும் பற்றி மரியாதைக்காகப் பிரஸ்தாபிப்பதுபோல, "பிரமாதம் ஸார், உங்கள் கதை!" என்று ஒரு ஸ்வீட் யங்க் திங்க் தேவைக்கதிகமாகப் புன்னகை செய்யும்போதோ அல்லது வேறு சிலர், என் அகம்பாவத்துக்குத் தீனி போட விரும்பாததுபோல, நான் கதைகளெழுதுவதொன்றும் தமக்குப் பெரிய விஷயமல்லவென்று காட்டிக் கொள்ளச் சிரமப்படும்போதோ, எனக்குச் சிரிப்புத்தான் பொத்துக் கொண்டு வருகிறது.

அன்புடையீர்! எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன்; முடிந்தது. காதலித்தவளை மறக்க முயன்றேன்; முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. எத்தனைதான் உதாசீனப்படுத்திய போதிலும், "தூக்கிக் கொள்ளணும்!" என்று சிணுங்கும் குழந்தையைப் போல இது மீண்டும் மீண்டும் என் காலை வந்து கட்டிக் கொண்டதால், 'ஏதோ நீயாவது என்னிடம் விசுவாசமாயிருக்கிறாயே!' என்று நான் இதைத் தூக்கிச் சுமக்கத் தொடங்கியிருக்கிறேன். என் மூஞ்சிதானே என் குழந்தைக்கும் இருக்கும்? இது எல்லாருக்கும் பிடித்திருக்க நியாயமில்லை. இதற்காக மூஞ்சியை மாற்றிக் கொள்வதோ சாத்தியமில்லை. ஆகவே என் எழுத்துக்களைப் படித்துவிட்டு, 'இப்படி ஒரு எழுத்து ஏன்? இப்படிப்பட்ட முயற்சி ஏன்?' என்று அங்கலாய்ப்பவர்களும் சிரிப்பவர்களும் கோபப்படுகிறவர்களும் விரட்ட விரட்ட மூக்கில் வந்து உட்காரும் ஈயைப்போல, இரவின் அமைதியினூடே திடீரென்று பக்கத்து வீட்டிலிருந்து கேட்கும் குழந்தையின் அழுகைச் சத்தத்தைப் போல, இதையும் சகித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு தொந்தரவாக நினைத்து, அதிகமாகச் சட்டை செய்யாமல், வேறு நல்ல எழுத்துக்களையும், அவற்றின் எழுத்தாளர்களையும் தேடிக் கண்டெடுப்பதிலும், அவர்களைச் சீராட்டுவதிலும், தம் பொழுதை உபயோகமாகச் செலவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.ஆதவன் - அசோகமித்திரன்

ஆதவனும் நானும் 'தீபம்' காரியாலயத்தை விட்டிறங்கி மவுண்ட் ரோடு ரவுண்டானா அருகில் நடந்து வந்தோம். அண்ணா சிலை அப்போது நினைக்கப்படக்கூட இல்லை.

"உங்களுக்கு இன்னும் வயதாகியிருக்கும் என்று நினைத்தேன்" என்று ஆதவன் சொன்னார்.

"எனக்கு நிறையவே ஆகிவிட்டது. ஆனால் நான்தான் உங்களை இன்னும் வயதானவராக எதிர்பார்த்தேன்." என்று பதில் சொன்னேன். அது 1967ஆம் ஆண்டு. மிகக் குறுகிய இடைவெளியில் 'இண்டர்வியூ' 'அப்பர் பெர்த்' என அவருடைய இரு பக்குவமிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்தரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இருபது ஆண்டுகளில் அவர் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை.

இந்த இருபது ஆண்டுகள் எங்கள் இருவருக்கும் பலவிதத்தில் ஒரே மாதிரியாக இருந்துவிட்டது. பாத்திரங்கள் என்று எடுத்துக் கொண்டால் எங்கள் இருவர் படைப்புகளிலும் நிறைய ஆள் மாறாட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகப் பலர் அபிப்பிராயப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 1960, 70களில் இந்திய நகரங்களில் இளமைப் போதைக் கழித்த, படித்த மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை அபிலாஷைகளையும், சோகங்களையும் நிராசைகளையும் ஆதவன் போல யாரும் தமிழில் பிரதிபலிக்க முடிந்ததில்லை.

ஆதவனுடைய படைப்பு ஒன்றில் திடீரென ஓர் இளைஞன் நினைப்பான் : "குருதத் கூடத் தற்கொலை செய்துகொண்டு போயாயிற்று. இனி நான் ஏன் இருக்க வேண்டும்?" எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இளம் வயதில் ஓர் உன்னதமான இலட்சிய நிலையில் இத்தகைய மனநிலையை யார்தான் அனுபவிப்பதில்லை? எந்தச் சுயநலக் கலப்பும் இல்லாத இந்த நிலைக்குப் புறவாழ்க்கையில் ஒரு பலனும் கிடையாது. ஆனால் இத்தகைய சோகமும் ஏக்கமும் ஒரு மனிதனின் உண்மையான பரிமாணங்கள் அல்லவா? குருதத் ஒரு ஹிந்தி சினிமாப்பட டைரக்டர். அவருடைய படைப்புகளிலிருந்து ஒரு தோற்றம் அவரைப் பற்றி லட்சக்கணக்கானோர் மனத்தில் கெட்டிப்பட்டு அவர் திடீரென்று இறந்தவுடன் ஒரு கணம் வாழ்க்கையே அர்த்தமற்றதாகத் தோன்றச் செய்து விடுகிறதல்லவா! இந்தத் தோற்றமும் இப்படி நினைப்பதும் லெளகீக உலகிற்கு உதவாத 'ரொமாண்டிக்' சாயைகள் என்று உதாசீனப்படுத்தலாம். ஆனால் அச்சாயைகள் மனத்தில் நேரும்போது மனிதன் எத்தகைய புனித தளத்திற்கு உயர்ந்து விடுகிறான்!

ஆதவனின் முதல் நாவலும் அவருடைய படைப்புக்களில் சிகரம் போல இருப்பதுமான 'காகித மலர்கள்' ஒரு விதத்தில் அவர் குருதத்திற்குச் செலுத்திய அஞ்சலிதான். குருதத்தே 'காகித மலர்கள்' என்ற தலைப்பில் மிகுந்த ஆர்வத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் ஒரு திரைப்படம் எடுத்தார். அப்படத்திற்குப் பிறகு தன் கதாநாயகன் போல குருதத்தின் வாழ்க்கையும் சிதறுண்டு போயிற்று. ஆனால் ஆதவனுடைய நாவல் ஒரு சிறப்பான இலக்கியப் பயணத்தின் துவக்கமாயிருந்தது. அவர் எழுதிய 'பழைய கிழவர் புதிய உலகம்' ஆண்டின் சிறந்த சிறுகதையாக 1974ல் தேர்தெடுக்கப்பட்டது. 'கணபதி ஒரு கீழ் மட்டத்து குமாஸ்தா' ரஷ்ய மொழியில் பெரும் பாராட்டு பெற்றது. அவருடைய பல கதைகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியாகித் தற்காலத் தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு மதிப்புக்குரிய இடம் வாங்கித் தந்திருக்கின்றன.

ஆதவனுடைய எழுத்துபோலவே அவருடைய சுபாவமும் மென்மையானது. வாழ்க்கையெல்லாம் அவர் பிறருக்குச் செய்த சிறுசிறு தியாகங்கள் கணக்கற்றவை. சாதுவானவனைத் துன்புறுத்துவதில் களிப்படையும் வக்கிர குணமுடையவர்கள் பால்கூட அவருக்குப் பரிவுதான் இருந்தது.

திடீர்ச் சாவும் தற்கொலையும் இன்றையப் புனைகதைப் படைப்புகளில் அடிக்கடி வருவதுதான். ஆனால் ஆதவனுடைய கதைகளில் இவை சற்று அதிகமாகவே காணப்படுவதாக நான் நினைத்ததுண்டு. இந்தக் கற்பனைச் சாவுகள் படிப்பவர்களை ஓரளவு திடமனது உடையவர்களாக்க உதவும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் 45 வயதுகூட முடியாதபோது, சிருங்கேரி புண்ணியத் தலத்தில் ஆற்றில் குளிக்கப் போனவர் சுழியில் சிக்கி, இறந்தார் என்று ஜூலை இருபதாம் தேதி தகவல் கிடைத்தபோது திடமனத்தோடு இருக்க முடியவில்லை.

ஆதவன் - பாகம் ஒன்று


திசைகள் செப்டம்பர் 2004 இதழ் ஆதவன் சிறப்பிதழாக வெளிவந்தது. அப்போது ஆதவனின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமில்லை. சமீபத்தில் படித்த பின்பு இணையத்தில் தேடிப்பார்த்தேன். திசைகளிலிருந்து அது காணாமல் போயிருந்தது. கூகிளின் கேஷ் புண்ணியத்தில் அது படிக்க கிடைத்தது. அதை இங்கே சேமித்து வைத்துக்கொள்கின்றேன். ஒரே ஒரு சிறிய எச்சரிக்கை. சற்றே நீளளளளளளளமான பதிவு இது. பின் எப்போதாவது பயன்படும் என்று பதிந்துள்ளேன்.

நன்றி: திசைகள் இதழ், தீபம் கட்டுரைகள், படைப்பாளிகள் உலகம்காகித மலர்கள் - ஒரு மதிப்பீடு தி.க.சிவசங்கரன்

நூறு வயதைக் கடந்துள்ள தமிழ் நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் வளர்ச்சிக்கும் உயிராற்றலுக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது, ஆதவனின் "காகித மலர்கள்". இது ஓர் 'அக உலக நாவல்' என்று கூறலாம். 30 அத்தியாயங்களையும், சுமார் 490 பக்கங்களையும் கொண்ட இதில் சம்பவங்கள் அதிகம் கிடையாது. மிக நிதானமாகவும் ஆழமாகவும் படித்து அனுபவிக்க வேண்டிய படைப்பு இது. பல்வேறு பாத்திரங்களின் மன ஓட்டங்களை நுட்பமாகச் சித்திரிக்கும் இந்நாவலின் களம், புதுடெல்லி. ஒரு பரந்த பகைப்புலத்தில், இலக்கிய ஓவியமாக இந்நூல் தீட்டப் பெற்றுள்ளது. 1972 ஏப்ரல் - 1975 மார்ச் கால கட்டத்தில் இந்நாவலில் இந்தியத் தலைநகரின் மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு மக்கட் பகுதியினரின் வாழ்க்கைப் போக்கு, மன ஓட்டங்கள் ஆகியவற்றைக் காணலாம். புதுடெல்லியின் அதிகார வர்க்கம். மாணவர் உலகம், பத்திரிகை உலகம், அரசியல் உலகம், கலை உலகம், விஞ்ஞான உலகம் (பஸ் போக்குவரத்துத்), தொழிலாளர் உலகம் முதலியவற்றின் பிரதிநிதிகளை இதில் சந்திக்கிறோம்.

- உணவு அமைச்சகத்தில் டிபுடி செக்ரடரியாகவும் தென்னிந்தியக் கிளப்பின் காரியதரிசியாகவும் இருந்து, தமது பல்வேறு வேடங்களால் ஜாயிண்ட் செக்ரடரியாகப் பதவி உயர்வு பெறும் பசுபதி;
- நவநாகரிகப் பழக்க வழக்கங்களில் திளைத்து, தன் கணவனின் பதவி உயர்வுக்கு உறுதுணையாக இருந்து, நாடக நடிப்பில் ஈடுபாடுள்ள குடும்பத் தலைவியாக விளங்கும் மிஸஸ் பாக்கியம் பசுபதி (வயது 52);
- ஐந்தாண்டுகள் அமெரிக்காவில் பயின்ற பின்னர் தாயகம் திரும்பி, ஓர் அமெரிக்க சர்வகலாசாலையில் 'எகாலஜி' (இயற்கை - சூழ்நிலை இயல்) என்னும் விஞ்ஞானத் துறையில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆய்வுரை எழுத முனைந்துள்ளவனும், பசுபதி தம்பதியின் மூத்த மகனுமான விசுவம் (வயது 32);
- விசுவத்தின் மனைவியும், விமானக் கம்பெனியில் ஓர் ஊழியருமான பத்மினி;
- கல்லூரிப் பரீட்சைகளில் பலமுறை தோற்று, பி.ஏ. இறுதிப் பரீட்சைக்கு வேண்டா வெறுப்பாக ஆயத்தமாகிக் கொண்டு, அதே சமயத்தில் 'ரொமாண்டிக்' கனவுகளிலும் கற்பனைகளிலும் வாழும் இளங்கவிஞனும், விசுவத்தின் தம்பியுமான செல்லப்பா (வயது 24);
- மேலைய கலாச்சாரத்தில் பற்றுக்கொண்ட ஆவேசமிக்க கல்லூரி மாணவர் தலைவனும், செல்லப்பாவின் தம்பியுமான பத்ரி ஆகியோரைக் கொண்ட குடும்பத்தின் உறுப்பினர்கள் இந்நாவலின் பிரதான பாத்திரங்கள்.

மிஸஸ் பாக்கியத்துடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மத்திய அமைச்சர்; செக்ஷன் ஆபீசர் எம்.ஜி.ஒய். ஐயர்; அவர் மகன் (சீற்றமுள்ள கல்லூரி மாணவன் - பத்ரியின் நண்பன் - ஆங்கில எழுத்தாளன்); கணேசன்; 'டைம்ஸ்' பத்திரிகையின் துணை ஆசிரியரும் பசுபதி குடும்பத்தின் நண்பருமான நரசிம்மன்; அந்தக் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவளும், கல்லூரி மாணவியும், பத்ரி, கணேசன், செல்லப்பாவின் சிநேகிதியும், சுதந்திரப் பிரியையுமான தாரா; பிரபல வலதுசாரி எம்.பி.யான ஆர்யபிரகாஷ்; அவர் கட்சியைச் சேர்ந்த மாணவர் யூனியன் தலைவர் ராம்கிஷோர்; பத்திரிகை ஆபீஸ் டைப்பிஸ்ட் மற்றும் செல்லப்பாவின் நண்பனான ரமணி; விசுவத்தின் நண்பனும் விவசாய ஆராய்ச்சிக் கழக ஊழியனுமான உண்ணி, அவன் மனைவி முதலிய பாத்திரங்கள், புது டெல்லியின் மேல்தட்டு மற்றும் நடுத்தட்டுப் பிரிவினர்.

டிரைவர் கபூர்சந்த், கண்டக்டர் ராம்பிரஷாத், பசுபதியின் வீட்டு வேலைக்காரன் ராம்சிங் முதலிய பாத்திரங்கள், கீழ்த்தட்டுப் பிரிவினர். சுமார் 20-க்கு மேற்பட்ட பாத்திரங்கள், இந்நாவலின் ஊடும் பாவுமாக உள்ளனர். இவர்களின் மனப்போக்குகளும் செயல்பாடுகளும் இந்த நாவலுக்கு உருக்கொடுக்கின்றன. வர்ணனைகள் மற்றும் உரையாடல்கள் வாயிலாகவும் இந்நாவல் விரிவடைகிறது; ஆழமும் சுவையும் பெறுகிறது.

பாத்திர இயல்புகள்

இந்நாவலின் சில குறிப்பிட்ட பாத்திரங்களின் இயல்புகளைக் காண்போம்:

1. விசுவம்

'இயற்கையின் நியதிகளை உணருதலையும், அவற்றைப் பேணுதலையும், ஒரு முக்கிய அடிச்சரடாக இந்நாவல் கொண்டுள்ளது' என்று ஆதவன் கூறுகிறார். எனவே, 'எகாலஜி' (இயற்கை - சூழ்நிலை இயல்) விஞ்ஞானியும் அறிவு ஜீவியுமான விசுவம், இந்நாவலில் ஒரு பிரதான பாத்திரம் என்றே சொல்லவேண்டும்.

'இந்திய நகரங்களின் சூழ்நிலையில் யந்திர நாகரிகத்தின் பாதிப்புகளும் விளைவுகளும்' என்ற தலைப்பில், விஸ்கான்ஸின் யுனிவர்ஸிடிக்கு இன்னும் 6 மாதங்களுக்குள் விசுவம் ஆய்வுரை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, புது டெல்லியிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மனைவியுடன் அவன் வந்திருக்கிறான்.

பரிவும் இங்கிதமும், உண்மையில் நாட்டமும், விடுதலை உணர்வும், தன்னடக்கமும், தனது தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதில் ஆர்வமும் கொண்டவன் விசுவம்.

'துரதிருஷ்டவசமாக அவன் யாருடனும் ஒத்துப்போக முடியாத ஒரு டைப்; மூடி ஃபெல்லோ. உக்கிரமான - சில சமயங்களில் சிரிப்பை வரவழைக்கும் - கொள்கை வீரன்' என்று விசுவத்தைப் பற்றி அவன் அம்மா மிஸஸ் பாக்கியம் வருணிக்கிறாள்.

ஆனால், அவன் மனைவி பத்மினியின் பார்வையில் - விசுவம் ஒரு ஹீரோ; உல்லாசப் பயணி; பைத்தியம்; குழந்தை; சோம்பேறி; ரொம்ப சென்சிடிவ்; உலக சகோதரத்துவத்தைப் பற்றிச் சொல்லுகிறவன்; ஆனால் நாலு பேருடன் கலகலப்பாக பழகத் தெரியாதவன்!

விசுவத்தின் லட்சியம் என்ன? அடிப்படையான குணாம்சம் என்ன?

தனக்குள் விசுவம் இவ்வாறு சிந்திக்கிறான்: ஒரு டாக்டர் பட்டம்; அதன் மூலம் ஓர் உயர்ந்த பதவி - இதுவா அவன் லட்சியம்? இல்லை. அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தான் வேண்டுவது என்ன என்பது பற்றி ஒவ்வொரு கணமும் தெளிவுடன் இருக்கவேண்டும். தன்னுடைய அப்பாவைப் போலப் போராட்டமேயன்றி, அதிகச் செலாவணி பிம்பங்களுடன் அடித்துச் செல்லப்படுவதை அவன் விரும்பவில்லை.

'தன்னைத் தன் பார்வையில் நிரூபித்துக் கொள்வதுதான் அவனுக்கு முக்கியம். தன்னைப் பற்றித் தன் திருப்திக்காகத் தெரிந்து கொள்வதுதான் முக்கியம். ஆழத்தில், வெகு ஆழத்தில், அவன் யார்? அவன் யாசிப்பது எது? இதை அவன் கண்டுபிடிக்க வேண்டும். தேடியவாறு இருக்கவேண்டும். மற்றவர்கள் அவனைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களுக்குப் பலியாகாமல் அவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இது சாத்தியம்தானா?'

இவ்வாறு தன்னைப் பற்றிய வேதாந்த விசாரணையில் ஈடுபடும் விசுவம், 'இயற்கையைத் தொழுதலை மீண்டும் நாகரிகமாக்குவதுதான்' உலகம் அழியாமல் காப்பதற்கான ஒரே வழி என்றும் எண்ணுகிறான். 'இது அவ்வளவு சுலபமானதல்ல. மரங்களையும் செடி கொடிகளையும் நேசிப்பது என்பது தனிமைப்படுத்தப்படக்கூடிய ஓர் அம்சமல்ல; விஷயமல்ல. பல தலைமுறைகளாக வளர்ந்து ஸ்தாபிதமாகியுள்ள ஒரு மனப்போக்கே மாற்றப்பட வேண்டும்' என்று கருதுகிறான்.

டெல்லியின் தாறுமாறான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கியவர்கள் யாராவது ஒரு ஸ்டுபிட் அண்டர் செக்ரடரி, டிபுடி செக்ரடரி அல்லது இவர்களைப் போன்ற ஆசாமியாக இருக்கும் என்று கணேசன் கூறியபொழுது, விசுவம் இவ்வாறு சொல்கிறான்:

'அண்டர் செக்ரடரியும் டிபுடி செக்ரடரியும்கூட நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டவர்கள்... அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. இந்த ஸிஸ்டமே-அமைப்பே தவறானது'.

இவ்வாறு கருதும் விசுவம், நாவலின் இறுதியில் எவ்வாறு இருக்கிறான்?

'தன் கவர்ச்சிகரமான பிரதிபலிப்புகளை நாடி, நாடியதைக் கண்டதாக மயங்கி, தன்னிடமிருந்து தப்பியவாறு' இருக்கிறான்.

'நான் ஏதேதோ பொய்களில் சிக்கிக் கொண்டேன்; என்னைக் காப்பாற்று' என்று பத்மினியை நினைந்து வருந்துகிறான்.

அவனுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை அறிவிக்கும் தந்தியைக் கண்டவுடன், அவன் மனம் இலேசாகிறது.

பிரதான பாத்திரமான விசுவம், ஒரு சிறந்த படைப்பு. இந்த அறிவு ஜீவியின் உளப் போராட்டங்கள், நன்கு சித்திரிக்கப் பெற்றுள்ளன.

2. செல்லப்பா

ஏப்ரலில் பி.ஏ.யை முடிக்க எண்ணும் செல்லப்பா, மென்மையான உள்ளம் படைத்தவன்; பணிவும், அன்பும், ஒத்துழைப்பும், நகைச்சுவை உணர்ச்சியும் கொண்டவன். மிஸஸ் பசுபதியின் தனி அன்புக்குப் பாத்திரமான செல்லப் பிள்ளை.

இவன் பரீட்சை மற்றும் பாடப் புத்தகங்களை வெறுப்பவன்; ரொமாண்டிக் கனவுலகில் சதா சஞ்சரிப்பவன்; பெண்ணழகை ரசிப்பவன்; இளங் கவிஞன்; கலை - இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவன்.

ஆனால் இவன் தன்னம்பிக்கை அற்றவன்; முயற்சி செய்யத் தயங்குபவன்; வாழ்க்கையின் நிஜங்களுக்கு அஞ்சி, கற்பனைகளில் சுகம் காண்பவன்.

'அந்தந்தச் சமயங்களில் செய்யவேண்டிய விஷயங்கள் அதற்கான நேரம் கடந்த பிறகுதான் அவனுக்கு எப்போதுமே புலப்படுகின்றன; மிக எளிய முடிவுகளை எடுப்பதில் அவனுக்கு எப்போதுமே சாமர்த்தியம் போதாது'.

'செல்லப்பாவின் பிரச்சினைகள் எல்லாம் தற்செயலாகத் தீர்ந்தால்தான் உண்டு; அவனாக அவற்றைத் தீர்க்க சக்தியற்றவன்'.

பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றும் ரமணியும் செல்லப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்களின் சந்திப்புகளும் உரையாடலும் மிகச் சுவையானவை.

ரமணிக்குத் திருமணம் ஏற்பாடாகிவிட்டதால், செல்லப்பாவின் தனிமையும் மன உளைச்சல்களும் அதிகரிக்கின்றன.

பி.ஏ. பரீட்சையை நன்றாக எழுதாததால் தனக்குத் தோல்வி நிச்சயம் என்பதைச் செல்லப்பா உணருகிறான். தனது வேதனைகளை மறக்க ஊர் சுற்றுகிறான்; சினிமா பார்க்கிறான். இறுதியில், தாராவின்பால் அவனுக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்படுகிறது. அவளது அரவணைப்பைப் பெற்ற அவன், இவ்வாறு எண்ணுகிறான்:

'இவளைத் தினம் தினம் பார்க்க வேண்டும். இவள் போடுவது வேஷமாக இருந்தாலும் பாதகமில்லை. நான் எங்கேயாவது பற்றிக் கொண்டாக வேண்டும். இவள் ஒரு இவள்... அதுவே முக்கியமானது; போதுமானது'

இத்தகைய முடிவுக்கு வரும் செல்லப்பா, இந்த நாவலின் ஜீவநாடியான பாத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறான்.

3. பத்ரி

செல்லப்பாவின் தம்பியான பத்ரி, கல்லூரி மாணவன்; பாப் மியூசிக் மற்றும் மேலைய கலாசாரத்திலும் பெண்களுடன் பழகுவதிலும் பற்றுக் கொண்டவன்; சுதந்திரப் பிரியன்; துணிச்சல் உள்ளவன்; பெற்றோருடன் உளமார்ந்த ஒட்டுறவு இல்லாமல், அந்நியமாகி நிற்பவன்.

யுனிவர்சிடி ஸ்பெஷல் பஸ்ஸில் தாராவைக் கேலி செய்த மாணவர்களைக் கண்டக்டர் ராம் பிரகாஷ் கண்டிருக்கிறான்; அவனை மாணவர்கள் அடிக்கின்றனர்; அச்சமயத்தில் பத்ரி தலையிட்டு, கண்டக்டரைக் காப்பாற்றுகிறான்.

அவனுக்கும் அவனது சிநேகிதியான தாராவுக்கும் டிஸ்கோதேயில் வாக்குவாதம் ஏற்பட்டு, அவனது ஆணவம் மேலோங்குகிறது; 'போகலாம்' என்று அவன் கோபத்துடன் எழுந்து விடுகிறான்.

மாணவர் இயக்கம் ஒரு ஜன்னியைப்போல அவனை ஆட்கொள்கிறது.

மாணவர் யூனியன் தலைவர் ராம்கிஷோருக்கு எதிரான அணிக்குத் தலைமை தாங்குகிறான், பத்ரி. மாணவர்கள் தொடர்ந்து போராடுவதை ராம்கிஷோர் எதிர்க்கிறான். இதனால் பத்ரி அணியைச் சேர்ந்த குல்வந்த் ஆத்திரமடைகிறான்; அவனது ஆட்களில் ஒருவன் ராம்கிஷோரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுகிறான்.

அதிருப்தியுற்ற மாணவர் கும்பல், அடாவடிச் செயல்களில் இறங்குகிறது. பஸ்களைக் கடத்துதல், எரித்தல் முதலியவற்றில் ஈடுபடுகிறது.

ஒருநாள் சில மாணவர்கள் ஒரு பஸ்ஸை 'ஹைஜாக்' செய்யும்பொழுது, நடைபாதையில் வாழும் ஒரு சக்கிலியன் குடும்பத்தின்மீது பஸ்ஸை ஏற்றிவிடுகின்றனர். சக்கிலியனும் அவன் மனைவியும் அங்கேயே மடிந்து விடுகின்றனர்; அவர்களுடைய குழந்தை மட்டும் சாகவில்லை. பெருந்திரளாகக் கூடிய மக்கள், பத்ரியையும் இதர மாணவர்களையும் பஸ்ஸுக்குள் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றனர்; அந்த மாணவர்களைப் போலீஸார் ஸ்டேஷனுக்கு இட்டுச் செல்லுகின்றனர்.

தமது செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் பிடியிலிருந்து பத்ரியை விடுவிக்கும் பசுபதி, மகனைக் கண்டிக்கிறார். ஆனால் அவன் சீறுகிறான்:

'ஜெயிலுக்கு அனுப்பினால் போயிருப்பேன்... எனக்குப் பயமில்லை. உன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமென்று நிரூபிக்க இது இன்னொரு சந்தர்ப்பம், அவ்வளவுதான். அந்த 'ஈகோ' வினால்தான் நீ வந்தாயே தவிர, எனக்காகவா வந்தாய்?' என்று பத்ரி எடுத்தெறிந்து பேசுகிறான்.

பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்து, வீட்டுக்கு அழைத்து வருகிறார் பசுபதி.

தலைமுறை இடைவெளியின் சின்னமாகவும், இந்நாவலில் ஒரு முக்கிய இழையாகவும் விளங்கும் பத்ரியைத் திறமையுடன் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

4. பசுபதி

டிபுடி செக்டரடரியாக இருந்து ஜாயிண்ட் செக்ரடரியாகப் பதவி உயர்வு பெறும் பசுபதி, புதுடெல்லி உயர் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி ஆவார்.

சுறுசுறுப்பாக வெவ்வேறு வேடங்களை அணிந்து, வெவ்வேறு மட்டங்களில் சரளமாகப் பழகும் பசுபதி, மத்திய அரசாங்க எந்திரத்தின் போக்குகளை நமக்கு நன்கு உணர்த்தும் பாத்திரமாக விளங்குகிறார். ஆதவனின் படைப்பாற்றலுக்கு இவர் ஒரு சான்று.

'அப்பா ஒரு சிறந்த நடிகர், தன்னைப் பற்றி பல்வேறு பிம்பங்களை உருவாக்குவதில் வல்லவர்' - இது பசுபதியைப் பற்றி விசுவத்தின் கருத்து.

எத்தனையோ மேலதிகாரிகளின்கீழ் கிடைத்த பிரமோஷன்கள்பற்றி, ஜாயிண்ட் செக்டரரியாகப் பதவி உயர்வு பெற்றுள்ள பசுபதி எண்ணிப் பார்க்கிறார்; அப்போது பாக்கியத்தின் நினைவும் அவருக்கு வருகிறது. 'அவள் - பாக்கியம் இல்லாமல் இது (பிரமோஷன்) சாத்தியமாகியிருக்காது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இது பற்றி அவருக்கு எந்தவிதமான கிலேசங்களும் ஏற்பட்டதில்லை...'

'நான் மூர்க்கமாக எதையும் விலக்க முயன்றதில்லை. யாரையும் தவிர்க்க முயன்றதில்லை. போலியான கட்டுப்பாடுகளில் சிக்கி உழலும் ஒரு 'டிபிகெல் பிராமினாக' இல்லாமலிருக்கவே நான் முயன்று வந்திருக்கிறேன். புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலைகள் இவற்றில் பரவசமடைந்து வந்திருக்கிறேன். என்னை நானே புதிதாகக் கண்டுபிடித்தவாறே இருந்திருக்கிறேன். ஒவ்வொரு கட்டமும், ஒவ்வொரு நிகழ்ச்சியும், புதிய வேஷமொன்றை அணியும் வாய்ப்பு...' என்று எண்ணுகிறார், பசுபதி.

அதே வேளையில், 'எனக்கு என்ன ஆகிக் கொண்டிருக்கிறது? நான் எங்கே தவறிழைத்தேன்? புதிய புதிய சூழல்களை - பாவனைகளை - வாழ்க்கை மதிப்புக்களைச் சுவீகரித்தவாறே இருந்தது தவறா?' என்னும் குற்ற உணர்வும் அவருக்கு ஏற்படுகிறது.

உணவு மந்திரியுடன் பாக்கியம் நெருங்கிப் பழகுவது குறித்து அவருக்கு அச்சமுண்டாகிறது: 'இவர் என்னைவிடச் சிறந்த நடிகர்... பாக்கியம்! எனக்குப் பயமாயிருக்கிறது'.

பாக்கியம் பங்கேற்கும் நாடகத்திற்குத் தலைமை தாங்கவிருக்கும் இந்த மந்திரி ஓர் அயோக்கியன், 'பக்கா ரோக்' என்று அவர் சந்தேகப்படுகிறார். இறுதியில் அவரது பயமும் சந்தேகமும் ஊர்ஜிதம் ஆகின்றன.

போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பத்ரியை அழைத்துக் கொண்டு அவர் வீடு திரும்பியதும், கார் விபத்தில் பாக்கியம் இறந்துவிட்டதாக டெலிபோன் மூலம் செய்தி வருகிறது.

புதிது புதிதாக வேஷமணியும் உயர் அதிகாரி பசுபதியின் பாத்திரத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் ஆதவன் சித்திரித்துள்ளார்.

5. பாக்கியம்

மிஸஸ் பாக்கியம், ஒரு குடும்பத் தலைவி மட்டுமல்ல; நாடக நடிகையும்கூட. எப்போதும் அழகிய நவநாகரிக பிம்பங்களை அணிய விரும்புகிறவள்.

'அம்மா நாடக மேடைக்கு வெளியேயும் ஒரு நடிகைதான். வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வேஷங்கள் அணிவதில் இன்பம் கொள்கிறவள். அப்பாவும் அப்படித்தான்' - இது விசுவத்தின் கருத்து.

குடும்பத்தின் மையப் புள்ளியாக இருக்க விரும்பும் மிஸஸ் பாக்கியத்தைப் பற்றி பத்ரியின் கருத்து என்ன? தாராவிடம் அவன் இவ்வாறு கூறுகிறான்: 'அவள் ஒரு தீவிர சுயநலவாதி. தன்னைப் பற்றிய மிகையான எண்ணமுடையவள். தான் சொல்வது எதுவாயினும் பிறர் அதை மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறவள்'.

உணவு மந்திரியின் தோரணையும், ஆகிருதியும், பேச்சும், பார்வையும் அவளை ஆக்கிரமித்து விடுகின்றன. அவள் பரவசம் அடைகிறாள்.

பாக்கியம் நடிக்கும் நாடகத்திற்கு மந்திரி தலைமை தாங்குகிறார்; அவரது நகைச்சுவைப் பேச்சு அவளுக்கு மகிழ்வூட்டுகிறது.

உலகையே வெல்லக்கூடிய தீரமும் சாகசமும் படைத்தவராகத் தோன்றிய மந்திரியுடன் ஓர் இரவில் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள், மிஸஸ் பாக்கியம். திடீரென்று நள்ளிரவில் அவளுக்கு ஞானோதயம் ஏற்படுகிறது.

'இவரை விட்டுச் செல்ல வேண்டும். உடனே செல்ல வேண்டும். எனக்கு என்ன ஆகிவிட்டது?... இவரும் எல்லா ஆண்களையும்போல ஓர் ஆண். எல்லா ஆண்களையும்போல ஆசையும், அகந்தையும், பயமும், சிறுமைகளும், இவற்றை மூடி மறைக்கும் முகமூடிகளும் உள்ளவர். என் உடலையும் என் 'ஈகோ' வையும் வருடத் தெரிந்தவர்' என்று பாக்கியம் எண்ணுகிறாள்.

'சே, நான் ஒரு முட்டாள்' என்று நினைத்தவாறு அவள் மந்திரியின் வீட்டு வாசலுக்கு வருகிறாள். அங்கிருந்த காரை ஓட்டிக் கொண்டு, சாலையில் படுவேகமாகச் செல்கிறாள்.

'என் கணவரே, என்னை அணைத்துக் கொள்ளுங்கள்; இறுக அணைத்துக் கொள்ளுங்கள்; என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அவள் உள்ளம் ஓலமிடுகிறது.

மிக வேகமாகச் சென்ற கார், தார் டிரம்களில் மோதித் தட்டாமாலை சுற்றுகிறது. எதிரே பிரும்மாண்டமாக அசுர வேகத்தில் வந்த லாரி அதனுடன் மோதுகிறது.

மிஸஸ் பசுபதியின் அலறல், பாதியிலேயே உறைந்து போயிற்று.

பாக்கியத்தின் துயர முடிவு, நம் உள்ளத்ல் ஓர் அநுதாபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆசிரியர் அவளைச் சாக அடித்திருக்க வேண்டாம் என்றும் தோன்றுகிறது. 'காவிய நியாயம்' (Poetic Justice) கருதி, அவளுக்கு இத்தண்டனையை அவர் வழங்கிவிட்டார் போலும்! ஒருவேளை, இந்த முடிவுதான் பொருத்தமானது என்றும் அவர் கருதியிருக்கலாம்.

6. கணேசன்

பத்ரியின் கிளாஸ்மேட்டான கணேசன் (வயது 19), இந்த நாவலில் ஒரு முக்கிய பாத்திரம்.

நடுத்தர வர்க்க இளைஞர்களின் பிரதிநிதியாகவும், 'தலைமுறை இடைவெளி' யின் சின்னமாகவும், வெளி நாடுகளில் பெரும் பதவி வகிக்க வேண்டும் என்ற வேட்கைகொண்டவனாகவும், பேச்சுக்களில் தந்திரசாலியாகவும் இவன் விளங்குகிறான்.

இவனுடைய அப்பா எம்.ஜி.ஓய். ஐயரும், பத்ரியின் அப்பா பசுபதியும் ஒரே மினிஸ்டிரியில்தான் இருக்கிறார்கள். ஆனால் பத்ரியின் அப்பா டிபுடி செக்ரடரியாகிவிட்டார், இவனது அப்பா வெறும் செக்ஷன் ஆபீஸர்தான்.

'அவன் தன்னைவிட உயர்ந்த பதவி வகிக்கவேண்டும் என்று அவன் அப்பா விரும்புகிறார். அதே சமயத்தில் குலதர்மத்தை அவமதிக்கக்கூடாதென்றும் விரும்புகிறார். தோசையும் முழுசாக இருக்க வேண்டும்; அதைத் தின்னவும் கூடாது என்றால் எப்படி முடியும்?... முதலில் அவன் பிதுரார்ஜிதமாகப் பெற்றுள்ள நடையுடை பாவனைகள், மனப்போக்கு ஆகியவற்றை மறந்தாக வேண்டும். சுத்தமான ஸ்லேட்டில்தான் தெளிவான சித்திரம் எழுதமுடியும். பழைய மாளிகையை இடித்துத்தான் புதிய மாளிகையை அமைக்க முடியும்' என்று கணேசன் எண்ணுகிறான்.

பத்ரி தலைமையில் மாணவர் போராட்டத்தைத் தூண்டிவிடும் ஆவேசப் பேச்சாளனாகவும் கணேசன் விளங்குகிறான். ஆனால் மாணவர்களின் கரவொலிக்கிடையே, முக்கிய கட்டத்தில் கூட்டத்தைவிட்டு நைசாக வெளியேறி, தாராவுடன் சினிமாவுக்குச் சென்றுவிடுகிறான்!

தனது ஆங்கிலக் கட்டுரைகளைத் திருத்தித் தருமாறு தாரா அவனிடம் கூறுகிறாள். அவளுடைய புன்னகை, பேச்சு, அவள் வாங்கிக் கொடுக்கும் ஐஸ் கிரீம், எல்லாமே அவள் தன் நோக்கங்களுக்கு ஏற்றவாறு அவனைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வசிய முறைகள்தாமோ என்று அவனுக்குத் தோன்றுகிறது.

ஞாயிறு இதழில் அவனது கட்டுரையைப் பிரசுரித்த 'டைம்ஸ்' துணையாசிரியர் நரசிம்மனைச் சந்தித்து, நன்றி கூறுகிறான், கணேசன். அவர் என்ன சொன்னாலும் ஒத்துப் போகவும் தயாராயிருக்கிறான்.

'இவனுக்கு நான் அமைப்பின் அடையாளம்; என் தோழமை இவனுக்கு ஓர் உந்துதல்; ஓர் ஏணி' என்று எண்ணுகிறார் நரசிம்மன்.

நடுத்தட்டு வர்க்கத்திலிருந்து மேல்தட்டு வர்க்கத்திற்குப் பாய்ந்து முன்னேற விரும்பும் கணேசனின் இயல்புகளை மிக அழகாக விளக்கியுள்ளார், ஆதவன்.

7. நரசிம்மன்

'டைம்ஸ்' பத்திரிகை துணையாசிரியர் நரசிம்மன், பசுபதி குடும்பத்தாரின் நண்பர்; இந்த அறிவு ஜீவி, ஒரு சுவையான பாத்திரம்; நாவலின் முக்கிய இழைகளில் ஒன்றாக விளங்கும் படைப்பு.

தாரா, கணேசன், விசுவம், பத்ரி முதலிய இளந் தலைமுறையினரின் எண்ணங்களையும் செயல்களையும் அநுதாபத்துடன் புரிந்துகொள்ள முயலும் முதிய தலைமுறையின் பிரதிநிதி இவர்.

தமது பத்திரிகையில் காரசாரமான தலையங்கங்களை எழுதும் நரசிம்மனின் இன்றைய நிலை என்ன?

'சமூக அநீதிகளுக்கெதிராக வாளை உருவிக் கொண்டு ஆவேசமாகப் பாய்ந்து செல்லும் வீரனாகத் தம்மைக் கற்பனை செய்துகொண்டு அவர் பெருமையில் திளைத்துண்டு... ஆனால் இப்போது அந்த மயக்கம் சிதைந்துவிட்டது. தானும் சரி, எடிட்டர் போன்றவர்களும் சரி, ஒரே நாடகத்தில் வெவ்வேறு பாத்திரங்களேற்று நடிக்கும் நடிகர்களென்றுதான் அவருக்குத் தோன்றியது. அவருடைய கோபமும் ஒரு விற்பனைப் பொருளாகிவிட்டது; வாசகர்களைக் கவருவதற்காக ஆடும் ஒரு போலியான "சாமியாட்டம்" ஆகிவிட்டது.'

கிளப்பில் விவாதம் நடக்கிறது. இருபது வருடங்களுக்கு மேலாக அஞ்ஞாதவாசம் புரிந்துவிட்டு, இப்போது மாணவர்க்ளைப் பக்கபலமாகக் கொண்டு அரசியலைச் சுத்தப்படுத்தும் இயக்கம் தொடங்கியிருந்த அந்தச் சர்வோதயத் தலைவர்தான் 'நம்மைக் காப்பாற்றப் போகிறார்' என்று நரசிம்மன் கூறுகிறார்.

'உன் மனம் இன்னும் அற்புதங்கள் புரியும் கதாநாயகர்களை நம்புகிற மட்டத்திற்குமேல் வளர்ச்சியடையவில்லைஒ என்று ஒருவர் அவரை நையாண்டி செய்கிறார்.

இதனால் ஆத்திரமுற்ற நரசிம்மன், முஷ்டியை ஓங்கி அவர் முகத்தில் குத்துகிறார்; அவரும் பதிலுக்கு நரசிம்மனைக் குத்துகிறார்!

பத்திரிகை ஆசிரியர் நரசிம்மன், நம் நினைவைவிட்டு நீங்காத ஒரு பாத்திரம். அவரது இயல்புகளை மிகத் தெளிவாக ஆதவன் படம் பிடித்துள்ளார்.

பத்மினி, தாரா போன்ற நவநாகரிக நங்கையரின் குண இயல்புகளை விரித்துரைக்க இங்கு இடமில்லை. அவர்களும் தமது அகங்காரத்தின் வழியே செல்பவர்கள்தாம் என்பதை ஆதவன் எடுத்துக் காட்டுகிறார்.

மொத்தத்தில், இந்த நாவலின் பிரதான பாத்திரங்களும், பஸ் கண்டக்டர் ராம்பிரகாஷ் போன்ற உப பாத்திரங்களும், மிகக் கவனமாகவும் யதார்த்தமாகவும் படைக்கப் பெற்றுள்ளன; அவர்களது பலங்களையும் பலவீனங்களையும் நாம் உணர்ந்து கொள்ளுமாறு மிக நுட்பமாக உருவாக்கப் பெற்றுள்ளனர். பாத்திரச் சித்திரிப்பு விஷயத்தில் ஆசிரியரின் விழிப்புணர்ச்சி பாராட்டத்தக்கது.

உரைநடை

இந்நாவலின் வெற்றிக்கு ஆதவனின் உரைநடையும் ஒரு முக்கிய காரணம்.

'எகாலஜி' யை (இயற்கை-சூழ்நிலை இயலை) ஓர் அடிச்சரடாகக் கொண்டுள்ள இந்நாவலில், புது டெல்லியின் குளிர் காலம், வசந்த காலம், வெய்யில் காலம், புழுதிக் காற்றுக் காலம், மழைக் காலம் ஆகிய பருவங்களின் சூழ்நிலையில், இயற்கை, மரம் செடி கொடிகள், மனிதர்கள் ஆகியோரின் நிலைகளை ஆதவனின் உரைநடை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

சில உதாரணங்கள்:

'வெய்யிலின் வீச்சும் ஒளியும் மங்கி, அதன் கடைசிச் சுவடுகள் மட்டும் ஆகாயத்தின் ஓரங்களில், வெளியே எடுத்துக் கொட்டுவதற்கு வசதியாக அறை மூலையில் பெருக்கி ஒதுக்கப்பட்ட குப்பையைப் போலக் காட்சியளித்தது'.

'குளிர் காற்று அவன் திறந்த மார்பைத் தாக்கியது. ஊறுகாயின் காரத்தைப்போல அந்தக் குளிரின் உறைப்பு அவனுக்கு ஓர் இதமான துன்பத்தைக் கொடுத்தது'.

'பலமுறை ரிப்பேர் செய்யப்பட்டுவிட்ட அந்த ஷூவின் அடிப்பாகம், பல்வேறு சக்கிலியர்களின் கைத்திறன் காரணமாய் இன்னமும் வாளிப்பாக இருந்தபோதிலும், கூன் விழுந்த முதுகைப் போல சற்றே வளைந்திருந்தது. ஷூவின் மேல் பாகமோ, பலமுறை பிரசவித்த ஒரு பெண்மணியின் இடையைப்போல கொளகொளவென்று தன் ஆரம்பகால வளைவுகளின் நேர்த்தியை முழுதும் இழந்துவிட்டிருந்தது'.

'வசந்தம். டபிள் டெக்கர் பஸ், மரங்களின் வேட்கையைத் தீர்ப்பதுபோல் கிளைகள்மீது முரட்டுத்தனமாக மோதி உரசிச் செல்கிறது. புதிய வானம், புதிய வெய்யில், பளிச்சென்ற வெய்யில், மரங்களைப்போல மனிதர்களையும் புதிய மெல்லிய - உடைகள் அணிய வைத்து ஒருவரையெருவர் புதுமையாக உணர வைக்கும் வெய்யில். மரங்கள் களைந்து எறிந்த கம்பளி உடைகளைப் போல சாலையின்மேல், நடை பாதைகளின்மேல், புல்வெளிகளின்மேல், பழுப்புத் திட்டுகளாய் உதிர்ந்து கிடக்கும் - காற்றில் தத்தித் தத்திச் செல்லும் - உதிர்ந்த இலைகள்; உலர்ந்த இலைகள்...'.

'ஷாப்பிங் முடிந்து அவர்கள் சாமான் பைகளுடன் காரில் வந்து ஏறிக்கொள்ளும் சமயத்தில்தான் திடீரென்று வீசத் தொடங்கியது புழுதிக் காற்று. எவ்வளவு உக்கிரமாக, ஆணின் பலத்தையும் வெறியையும் நினைவூட்டும் ஒரு ஹூங்கார ஓசையுடன் அடித்தது அந்தக் காற்று!'

ஆதவனின் உரைநடையில் கவித்துவம் மட்டுமின்றி, சமகாலப் பேச்சு வழக்கும் உள்ளது.

'இன்றைய உலகை இன்றைய நடையில் சித்திரிக்கிறது, காகித மலர்கள்' என்ற இமயப் பதிப்பகத்தாரின் கூற்று, முற்றிலும் சரியானதே.


கட்டுக்கோப்பு

'பல இழைகளைக் கொண்டு வேயப்பட்ட - கொஞ்சம் சிக்கலான அமைப்புக் கொண்ட - ஒரு நாவல் இது' என்று இந்நூலின் கட்டுக்கோப்பு பற்றி ஆதவன் குறிப்பிட்டுள்ளார்.

புதுமையான, சற்று சிக்கலான கட்டுக்கோப்புள்ள ஒரு நாவல் இது என்பதில் ஐயமில்லை. உதாரணம்: 13, 27, 28, 29, 30வது அத்தியாயங்கள்.

இந்த நாவலை இரண்டுமுறை நிதானமாகப் படித்தால், இதன் கட்டுக்கோப்பிலுள்ள புதுமையை வாசகர்கள் நன்கு உணரமுடியும்.

'காகித மலர்' களின் உத்திபற்றி, 'தமிழ் நாவல் 50 பார்வை' என்ற நூலில் அசோகமித்திரன் இவ்வாறு கூறுகிறார்: 'ஓவியம் (ஓர் உதாரணமாக, புதுடில்லி மாரிக்காலத் துவக்கத்தை வர்ணிக்கும் முதல் அத்தியாயம்), நாடகம், திரைப்படம் ஆகிய மூன்று கலைச் சாதனங்களும் எளிதில் வர்ணிக்க முடியாத ஓர் அதிசயக் கலவையில், அபூர்வமான இலக்கியப் படைப்பாக "காகித மலர்கள்" உருப்பெற்றிருக்கிறது.'

ஆழ்ந்த ரசனையுடனும், ஆய்வு உள்ளத்துடனும் இந்த நாவலைப் படிப்பவர்கள், அசோகமித்திரனின் கருத்து மெய்யானது என்பதை உணருவார்கள்.

புதுமை, சோதனை, தனித்தன்மை ஆகிய மூன்று முக்கிய அம்சங்களும் இந்நாவலில் விரவிக்கிடப்பதை கலா ரசிகர்கள் கண்டுகொள்வர்.

'ஒருவிதத்தில் இந்த நூல் ஒரு பிரஜையின் குரல். அந்தப் பிரஜை ஓர் எழுத்தாளன் என்பதால், அவனுடைய எண்ணங்கள் நாவல் வடிவம் பெற்றன. அவன் ஓர் இளைஞன் என்பதால், இந்த நாவல் தனித்த ஒரு தொனியும் லயமும் கொண்டமைந்துள்ளது' என்று ஆதவன் கூறுகிறார் (எனது 'காகித மலர்கள்' என்ற கட்டுரை).

ஆம்; அவர் கூறுவதுபோல இந்த நாவலில் 'தனித்த ஒரு தொனியும் லயமும்' இருக்கின்றன என்பதை நாம் உணருகிறோம்.

ஆதவனின் தத்துவ நோக்கு

'சுய பார்வையும் சுய இயக்கமும் மழுங்கடிக்கப்பட்டு, நாம் உருவாக்கிய ஓர் அமைப்பில் நாமே கைதிகளாகப் போயிருக்கிறோம் இன்று: வெவ்வேறு வேடங்களின் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே காகித மலர்கள் அறிமுகம் செய்கிறது.'

"அப்படியானால் விடை என்ன?" என்று ஒருவர் கேட்டார். கணேசன் ஓரிடத்தில் சொல்வதுபோல, "அமைப்பை இடித்துத் தரைமட்டமாக்குவதா?"... இல்லை... நிகழ வேண்டுவது, உண்மையில் மனமாற்றம்தான்: நாம் ஒவ்வொருவரும் ஒரு மொத்த அமைப்பின் பங்குதாரர் என்ற உணர்வின் அடிப்படையில், நம் "தானை" அடிக்கடி பரிசீலித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ளத் தயாராதல்' என்று மேற்கண்ட கட்டுரையில் ஆதவன் வலியுறுத்துகிறார்.

மார்க்சீய - லெனினியப் பார்வை உடையவர்கள், ஆதவனின் இத்தகைய தத்துவ நோக்கை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பே நமது பொருளாயத, ஆன்மீகச் சீரழிவுகளுக்கெல்லாம் காரணம் எனக் கருதுவோர், 'உண்மையில் நிகழ வேண்டுவது ஒரு மனமாற்றம்தான்' என்ற ஆதவனின் கருத்தை ஏற்க மாட்டார்கள். மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பு தகர்க்கப்பெற்று, சகல மக்களின் நலன்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சோஷலிச அரசு ஏற்படாத வரையில், 'நம் "தானை" அடிக்கடி பரிசீலித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ளுதல்' என்பது வெறும் நல்லெண்ணமாகவே நின்று விடும்; எனவே, மனமாற்றத்தை விரும்பும் ஆதவனின் அறநெறி உணர்வை நாம் வரவேற்றபோதிலும், அவரது தத்துவத்தின் வழியில் அது காரிய சாத்தியமற்றது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

நூலின் செய்தி

'இன்றைய அமைப்பின் தன்மைகள், திசைகள் பற்றிய ஓர் அதிருப்தியை' முக்கிய சரடாக இந்நூல் கொண்டுள்ளது என்று ஆதவன் கூறுகிறார்.

இந்த அதிருப்தியை வாசகர்கள் மனத்தில் ஏற்படுத்துவதுதான் நூலின் நோக்கம் என்று எனக்குத் தோன்றுகிறது.

மனிதர்களிடையேயான உறவுகளில் நேர்மையும் தூய்மையும் மிளிர வேண்டும்; அப்படியானால் வாழ்க்கையில் நேசமும் இனிமையும் நிறைந்திருக்கும். ஆனால், இன்றைய சமுதாய அமைப்பிலுள்ள சிலர், தமது சுயநல வேடங்களாலும், சுயநல வேடங்களாலும், சுய ஏமாற்றுக்களாலும், அகங்காரத்தாலும், மனித உறவுகளை அழுக்காக்கி விடுகிறார்கள்; எனவே மணமுள்ள மலர்களாகத் திகழவேண்டிய மக்கள், காகித மலர்களாகக் காட்சியளிக்கிறார்கள் என்ற செய்தி, இந்நூலில் தொனிக்கிறது.

'யதார்த்தம் உறைக்க வேண்டும். அந்த உறைப்பு, சில ஆக்கபூர்வமான சலனங்களை உருவாக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்' என்று தமது பிரகடனத்தில் கூறுகிறார், ஆதவன்.

இந்த நாவலில் அவரது விருப்பம் பெருமளவு நிறைவேறியிருக்கிறது என்றே கூறவேண்டும்.

விமர்சன யதார்த்தவாதம் (Critical Realism) என்ற படைப்பாக்க முறையில் எழுதப்பெற்றுள்ள இந்நாவல், கலையழகுடன் கூடிய ஒரு சிறந்த உள இயல் - சமுதாய இயல் சித்திரமாக விளங்குகிறது.

'ஒரு விதத்தில் என் எழுத்துக்கள் யாவுமே - இந்த நாவல் உள்பட - நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் கூறவேண்டும்; உங்கள் எதிரொலிகளே இந்தச் சம்பாஷணைக்கு முழுமை தரவேண்டும்' என்று தமது பிரகடனத்தில் ஆதவன் கூறுகிறார்.

அவரது நேர்மையான, நுட்பமான கலைப் படைப்பாகத் திகழும் இந்நாவலை நாம் மனமாரப் பாராட்டுவோம். 1970ம் ஆண்டுகளில் வந்த தமிழ் நாவல்களில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு என்பதில் ஐயமில்லை.காகித மலர்கள் - ஆதவன்

தி.க.சி. அவர்களும் பிறரும் என்னுடைய காகித மலர்கள் நாவலில் இந்த அளவு சிரத்தை காண்பித்து, அது பற்றிய தம் கருத்துக்களை எடுத்துக் கூறியதற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நாவலை எழுதுமாறு எனக்கு ஊக்கமளித்து, சுமார் மூன்று வருட காலம் தம் பத்திரிகையில் தொடராக வெளியிட்ட திரு. நா. பார்த்தசாரதி அவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி கூறுவது என் கடமையாகும். எழுத்தாளன் தன் எழுத்தின் பிரயோசனம் தொடர்பான பல அதிருப்திகளையும் அவநம்பிக்கைகளையும் சோர்வுகளையும் எப்போதும் சுமந்து திரிபவன். ஒவ்வொரு தடவை எழுத உட்காரும்போதும் இத்தகைய உணர்வுகளுடன் போராட வேண்டியிருப்பவன், பல சமயங்களில் இவற்றுக்கு முழுவதுமாக இரையாகித் துவண்டு சாய்ந்து விடக்கூடியவன். திரு. நா.பா. என் எழுத்து வாழ்வின் ஒரு முக்கியமான கட்டத்தில் எனக்கு ஆதரவுக் கரம் நீட்டி அணைத்துக் கொண்டவர். அவருடைய பக்கÀலம் இல்லாமல் இத்தகைய ஒரு நாவலை, இத்தகைய ஒரு பரந்த கான்வஸில், என்னால் எழுதி முடித்திருக்க முடியுமென்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

ஒருவிதத்தில் என் எழுத்துக்கள் யாவுமே - இந்த நாவல் உட்பட - நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும். சாதாரண face to face சம்பாஷணையின் கெடுபிடி, பெளதிக நிர்ப்பந்தங்கள், பரஸ்பர தாட்சண்யங்கள், வேஷங்கள், நமக்கே புரியாத சில குரோத அலைகள் ஆகியவற்றினூடே என் எண்ணங்களைக் கோர்வைப் படுத்த முடியாத ஒரு தாபம் தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத்துக்கு விரட்டுகிறது. அதாவது, நேரடிச் சந்திப்புகளின்போது என் வார்த்தைகள், அவற்றின் அர்த்தங்களுக்கு அப்பாற்பட்டு, என் பெளதிக ஆகிருதி, முகத்தின் தன்மை ஆகியவைகூட எதிராளியிடம் சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றன. முதல் பார்வையில் ஒருவரிடம் இனிய சகோதர பாவத்தைக் கிளறுகிற என் மூஞ்சி, இன்னொருவரிடம் முதல் பார்வையில் பகைமை உணர்வுகளையும் வெறுப்பையும் தூண்டுவது ஏன் என்பது என்னை எப்போதும் அலைக்கழிக்கிற ஒரு பிரச்சினை. இந்த 'பரஸ்பர பிம்பங்களின்' tension இலிருந்து விடுபட்டு என்னையும் என்னைச் சுற்றியுள்ள உலகத்தையும் பற்றிய நிதானமான, ஆழமான சம்பாஷணையில் ஈடுபடும் ஒரு சாதனமாகவே எழுத்தை நான் பயன்படுத்துகிறேனென்று நினைக்கிறேன். எந்தச் சம்பாஷணையையும்போல இந்தச் சம்பாஷணைக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. நீங்கள்தான் அந்த மறுபக்கம்; உங்கள் எதிரொலிகளே இச்சம்பாஷணைக்கு முழுமை தரவேண்டும். எத்தனைக்கெத்தனை இந்த எதிரொலிகள் முதிர்ச்சியும் நுட்பமும் மிக்கனவாயிருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை நம்மிருவருக்குமே மகிழ்ச்சியும் பயனும் தரக்கூடியதாக இந்த முழுமையின் தேடல் அமையும்.

இந்த வகையில், என் நாவலைப்பற்றிக் கூறப்பட்ட பல வகைக் கருத்துக்களும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. என் எழுத்தை - அதன் தன்மையையும் நோக்கங்களையும் - நான் மென்மேலும் பரிசீலித்துப் பார்த்துக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் இவை உதவும்.

'முழுமையின் தேடல்' என்று சொன்னேன். இந்தத் தேடலைப் பல சமயங்களில் ஓர் எல்லைக்கு மேலேயே நான் இட்டுச் செல்கிறேனோ என்கிற சந்தேகமும் எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. 'உங்கள் கதைகளில் ஒரு பிரச்சினையின் "இரு பக்கங்களையும்" காண்கிறேன்' என ஒரு நண்பர் மகிழ்ச்சியுடன் கூறியதும், இந்த 'இரு பக்க' ஆய்வு முயற்சியினால் என் படைப்புகளின் செறிவும் கலாரூபமும் பழுதுபட்டு விடுவதாக மற்றொருவர் கவலையுடன் சுட்டிக் காட்டியதும் இச்சந்தர்ப்பத்தில் எனக்கு நினைவு வருகின்றன. ஆனால் நல்லதோ கெட்டதோ, இதுதான் என் இயல்பு. ஒரு பக்கம் இந்த இயல்புக்கும்; மறுபக்கம் இலக்கியத்தின் பரிணாமரீதியான வடிவக் கோட்பாடுகள் மற்றும் 'மீறல்' களின் சாத்தியக்கூறுகளுக்குமிடையே, ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்க முயன்று போராடியவாறிருப்பதுதான் என் தலை விதி.

முழுமை பற்றிய ஒரு கவலை மற்றும் ஜாக்கிரதையுணர்வு காரணமாகவே, என் படைப்புப் பற்றிக் கூறப்படும் ஒவ்வொரு அபிப்பிராயமும் என்னைப் பதட்டம் கொள்ளச் செய்கிறது, அவசரமாகக் 'கோடிட்ட இடங்களைப்' பூர்த்தி செய்யத் தூண்டுகிறது - எல்லாருமே எல்லாவற்றையும் கண்டு சொல்லியே ஆகவேண்டும் என்பதுபோல. ஆனால் இது அவசியமில்லாதது மட்டுமல்ல, 'காகித மலர்கள்' போன்ற ஒரு நாவலின் விஷயத்தில் இது சாத்தியமுமல்ல என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கும்போது நான் உணருகிறேன். பல இழைகளைக் கொண்டு வேயப்பட்ட - கொஞ்சம் சிக்கலான அமைப்புக் கொண்ட - ஒரு நாவல் இது. எல்லா இழைகளுமே எல்லாருக்கும் பிடிபடுவதில்லை; பிடிபட்டாலும் இவை எல்லாமே ஒவ்வொருவருக்குள்ளேயும் ஆழ்ந்த சலனங்களை எழுப்புவதாக இல்லை... இன்றைய அமைப்பின் தன்மைகள், திசைகள் பற்றிய ஓர் அதிருப்தியை முக்கியச் சரடாகக் கொண்டிருக்கும் இந்நாவலில் ஆங்காங்கே இடதுநிலைச் சார்பு மிகவும் பளிச்சென்று, தவிர்க்க முடியாமல், தலைதூக்குகிறது. மார்க்ஸியச் சிந்தனையில் ஈடுபாடுள்ளவர்கள் இச்சார்பை இனம் கண்டுகொண்டது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. அதே சமயத்தில் அவர்களுடைய பாராட்டை என் தலையில் ஏதோ ஒரு பட்டயத்தை அவசரமாகக் கட்டி, ஏதோ ஒரு கொள்கைச் சிறையில் தள்ளும் முயற்சியாகவும் நினைத்து, நான் பீதியும் பதட்டமும் கொள்ளத் தொடங்குகிறேன் - என்னுடைய நாவலின் இடதுநிலைச் சார்பேயில்லை என்று சில சமயங்களில் ஆவேசமாக மறுக்குமளவுக்கு தம் சுயேச்சைத் தன்மை பங்கப்படாமலிருக்கவேண்டும் என்ற கவலையுள்ள எல்லாக் கலைஞர்களுக்குமே இத்தகைய பதட்டங்கள் இயல்புதான் என்று நினைக்கிறேன். பிறர் மீதும், அவர்கள் சார்பாகத் தன்மீதும், பெரிதுபடுத்தப்பட்ட பிம்பங்களை ஏற்றி, இந்தப் பிம்பங்களே சிறைகளாக மாறுகிற அவஸ்தைக்கு, என் பாத்திரங்கள் போலவே நானும் விதி விலக்கல்ல என்று இதன் மூலம் உணர்ந்து நான் சிரித்துக் கொள்கிறேன். ஓர் எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு நானே இருப்பதாக நினைக்கிற - அல்லது பாவிக்கிற - பலவகைப் பரிமாணங்களை மார்க்ஸிஸ்டுகளுக்கு மட்டும் நான் ஏன் மறுக்கவேண்டும்?

அல்லது இதே கேள்வியை வேறுவிதமாகக் கேட்கப் போனால், இலக்கிய ரீதியாகச் சில நுட்பமான (ஆனால் செறிவான) பற்றுக்கோடுகள், ஆழ்ந்த தேட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள நான், இத்தகைய பற்றுக் கோடுகளும் தேட்டங்களும் இலக்கியப் படைப்பாளியல்லாதோரிடமும் வித்தியாசமான தோற்றங்களில் இடம் பெற்றிருப்பதையும், வேறு வகைகளில் தன்னைப் பிரகடனம் செய்து கொள்ளத் துடிப்பதையும், உணரவும் அங்கீகரிக்கவும் தவறினால் அது என் கலையின் - இந்தக் கலையைப் போஷிக்கும் சக்திகளாக நான் நம்ப விரும்புகிற என்னுடைய பரிவின், எந்த ஒரு திட்டம் அல்லது விளக்கத்துக்கும் தப்பி நிற்கும் வாழ்க்கையின் பிரும்மாண்டம் அல்லது மர்மம் பற்றிய பிரக்ஞையின் - குருட்டுத்தனமான மறுதலிப்பாகவே அமையும் அல்லவா? என்னுடைய படைப்புடன் பிறர் தத்தம் நோக்கில் நேர்மையுடன் ஓர் உறவை ஸ்தாபிக்க முயலுதல் எவ்வாறு என் ஆட்சேபத்துக்குரியதாக முடியும்? மாறாக, பலதரப்பட்டவர்களைத் தன்னுடன் பலவகை மட்டங்களில் உறவுகொள்ளத் தூண்டுதலிலேயே என் படைப்பினுடைய பரந்துபட்ட தன்மையின், அதிகமான பரிமாணங்களின், வீச்சின், நிரூபணம் அடங்கியிருக்கிறதென்பதை நிதானமான தருணங்களில் நான் உணருகிறேன்.

இதேபோல, செல்லப்பா என்கிற பாத்திரம் பல இளைஞர்களை மிகவும வசீகரித்திருக்கிறது. பிற பாத்திரங்களுடன் விடவும் இந்தப் பாத்திரத்துடன் தாம் நெருக்கமான உணருவதாக அவர்கள் கூறியபோது, ஒரு தலைமுறை பற்றிய முழுமையான சித்திரம் எனக்குக் கிடைத்ததாக நான் உணர்ந்தேன். ஆனால் செல்லப்பாவை Withdrawal என்கிற 'ஒதுங்குதல் தன்மை' யின் குறியீடாகச் செய்து இவ்வியல்புக்கு 'வீர வணக்கம்' செய்வதும் என் நோக்கமாயிருக்கவில்லை. அதே சமயத்தில் இந்த 'ஒதுங்குதல்' பாலும், இத்தகைய இதர சில பொதுவான மனப்பாங்குகள், 'தான்' கள் அல்லது 'வேடங்கள்' பாலும் ஆசிரியரின் ஆழ்ந்த பரிவையும் ஈடுபாட்டையும் இந்நாவலைப் படிப்பவர்கள் உணர்வார்களென்று நம்புகிறேன். ஒரு self-righteosnessஐயும் pompousnessஐயும் இந்நாவலில் நான் அறவே தவிர்த்திருக்கிறேன். மனிதர்களின் 'வேடங்களைக் கலைத்தெறிகிறார்', 'ஹிப்பாக்ரஸியைச் சாடுகிறார்' போன்ற பிரயோகங்கள் இந்நாவல் குறித்த எழாமலிருக்க வேண்டுமென்பது என் பணிவான வேண்டகோள். நாமிருவருமே பங்குதாரர்களாக உள்ள இந்த அமைப்பைப் பற்றி நான் உங்கள்முன் சமர்ப்பிக்கும் ஒரு நுண்ணிய கருத்துச் சித்திரமாகவே இந்த நாவலை நீங்கள் - அதிக பட்சமாக - கொள்ளவேண்டும். இந்தச் சித்திரத்தில் வாழ்வின் இயல்பு பற்றிய ஒரு தவிப்பும் சோகமும் இருக்கிறது; கூடவே வாழ்வின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஓர் ஆர்வமும் பரபரப்பும் இருக்கிறது. ஒப்பாரி அல்லது வெறும் அங்கதச் சிரிப்பைக் கடந்த நிலையில் - வாழ்வின் பிரும்மாண்டத்தையும் 'வெல்ல முடியாத தன்மை' யையும் உணர்ந்த ஒரு பணிவுடனும் தன்னடக்கத்துடனும் - இது எழுதப்பட்டிருக்கிறது. விசுவமும் செல்லப்பாவும் அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் அர்த்தமற்ற சில நியதிகள், சில அநீதிகள் ஆகியவற்றினால் கஷ்டங்களுக்கு உள்ளாவதாகச் சித்திரித்துள்ள அதே சமயத்தில், அவர்கள் தாமும் பல பலவீனங்கள், குறைகள் உள்ளவர்களென உணர்த்தவும் நான் தவறவில்லை. தட்டையான இலட்சிய வார்ப்படங்களில் அவர்கள் உருவாகியிருந்தால் யதார்த்தம் தேவையான செறிவுடனும் பரிமாணங்களுடனும் உருவாகாமல் போயிருக்கும்; 'உறைக்காமல்' போயிருக்கும்.

யதார்த்தம் உறைக்க வேண்டும், அந்த உறைப்பு சில ஆக்கபூர்வமான சலனங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

ஒருவிதத்தில், இந்த நூல் ஒரு பிரஜையின் குரல். அந்தப் பிரஜை ஓர் எழுத்தாளன் என்பதால் அவனுடைய எண்ணங்கள் நாவல் வடிவம் பெற்றன. அவன் ஓர் இளைஞன் என்பதால் இந்நாவல் தனித்த ஒரு தொனியும் லயமும் கொண்டமைந்துள்ளது. இந்நாவலை நான் தீபத்தில் எழுதத் தொடங்கும்போது எனக்குச் சரியாக முப்பது வயது: இளைஞர்கள், முதியவர்கள், இரு சாராரையும் - ஒருங்கே - நுண்மையாகக் காணவும் உணரவும் ஏற்ற Vantage point. இன்று இதுபோன்ற ஒரு நாவலை என்னால் எழுதமுடியாது: குறிப்பாக, செல்லப்பா, பத்ரி, கணேசன், தாரா ஆகியோர் வரும் பகுதிகளை நிச்சயம் எழுதமுடியாது. எனவே, இந்நாவலைப்பற்றி இப்போது நான் சொல்லக்கூடிய எந்த விளக்கத்தையும் மீறி அது ஒரு தனித்த ஆளுமையும் ஜீவனும் உள்ளதாயிருக்கக் கூடும்: இது ரொம்ப முக்கியம்.

'எகாலஜி' பற்றி அறுபதுகளில் மிகவும் பேசப்பட்டது. இயற்கையில் ஒவ்வொரு உயிரினமும் அதன் சூழலையும் பிற உயிரினங்களையும் சார்ந்ததாக அமைந்துள்ள 'சங்கிலி இயக்கத்தின்' அம்சங்களைப் பரந்த நோக்கில் ஆராயும் புதிய விஞ்ஞானப் பிரிவே 'எகாலஜி'. மனிதனும் இச்சங்கிலியில் ஒரு பகுதிதான். வானமும் கடலும்கூட அதேபோல இதன் பகுதிகளே. சங்கிலியின் ஒரு கண்ணி இற்றுப் போனாலும் அதனால் சங்கிலியே முழுவதுமாகப் பாழ்பட்டுப் போகும், பயனற்றுப் போகும் என்பதே 'எகாலஜிஸ்டுகள்' இன்றைய மனிதனுக்கு - நாளைய சந்ததியரின்பால் தம் பொறுப்பை உணராமல் இச்சங்கிலியின் கண்ணிகளை நாசப்படுத்தி வரும் மனிதனுக்கு - கூறும் செய்தி.

'காகித மலர்களி' ல் வரும் பசுபதி ஐயரும், அவருடைய தலைமுறையைச் சேர்ந்த பிறரும், இந்தப் 'பொறுப்பற்ற தன்மை' யின் - தம் செயல்கள், முடிவுகள் ஆகியவை அடுத்த தலைமுறையினரை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய கவலை சிறிதும் இல்லாத போக்கின் - குறியீடுகள். மனிதனின், வாழ்க்கையின், வெளிப்பாடுகளை ஆராய்வதில் இன்பங்காண்கிற ஓர் எழுத்தாளனாக (அல்லது ஓர் அமெச்சூர் சமூகவியலாளனாக என்று வைத்துக் கொள்ளுங்கள்) நம் சமுதாய அமைப்புடன் 'எகாலஜி' என்ற கருத்தை இணைத்துப் பார்க்க நான் முயன்றிருக்கிறேன் இந்நா வலில் என்று இப்போது தோன்றுகிறது. அறுபதுகளில் 'எகாலஜி' பற்றி நான் விரிவாகப் படித்ததும், மாணவர் அதிருப்தியும் வன்முறை நடவடி க்கைகளும் என்னுள்ளே எழுப்பிய சிந்தனை அலைகளும், இந்நாவலில் என்னுடைய ஒரு பாணியில் கலாரூபம் பெற்றிருக்கின்றன.

வெவ்வேறு பாத்திரங்களின் தனித்த மனப் போராட்டங்களாக, பிம்பத் தேடல்களாக, அமைந்துள்ள காகித மலர்களின் அத்தியாயங்கள், இன்றைய சமூகம் வெவ்வேறு 'தான்' களாகப் பிளவுபட்டுக் கிடப்பதைச் சித்திரிக்கும் விதமாக அமைந்துள்ளன. மனிதனுள்ளே எப்போதுமிருக்கிற மிருகம் மீண்டும் மீண்டும் நாவலின் பக்கங்களில் 'வன்முறை' வடிவத்திலோ வேறு வடிவங்களிலோ தலைதூக்குகிறது. அதே சமயத்தில் சில 'தான்' களின் சிதறலாகவும் இது அமைகிறது. விசுவத்தின் தலையில் தடியடி படும்போது, வாழ்க்கையின் ஒரு மறுபுறத்தை, மற்றொரு பரிமாணத்தை, அவன் உணருகிறான். அதேபோல செல்லப்பா தான் யதார்த்தத்திலிருந்து ஒளிந்து வாழ நிர்மாணித்துள்ள ஓர் அழகிய கற்பனை உலகம், கண்டக்டரின் முரடுத்தனம், சினிமா தியேட்டரில் அவன் தொடையை வருட முயலுபவர் ஆகியவர்களால் கீறல்களையும் வடுக்களையும் சம்பாதித்த வண்ணமிருக்கிறது. இது வாழ்க்கையின் ஒரு inevitable process. ஒருவிதத்தில் கீறல்களும், அவற்றின் விளைவுகளுமே வாழ்க்கை என்றுகூடச் சொல்லலாம். செல்லப்பாவின் அம்மாவின் மரணமும் இத்தகையதுதான். அவள் தன் மருமகளை புதிய தலைமுறைப் பெண்மை பற்றிய தன்னுடைய ஒரு கொச்சையான பிம்பத்தில் பொருத்தி, அவள் ஒரு amoral person ஆகத் தானே உருவகித்துக் கொண்டு, அந்த amoralityயு டன் போட்டிபோட முயலுகிறாள். ஆனால் ஒரு முக்கியக் கட்டத்தில்தான் கடைசியில் தன் அம்மா, பாட்டி ஆகியவர்களைக் கட்டுப்படுத்திய ஒழுக்கநெறிகளுக்குக் கட்டுப்பட்டவள்தான் என்பதை உணருகிறாள். இது அவளைச் சிதற அடித்து விடுகிறது. தவறான பரஸ்பர பிம்பங்களும், இவற்றின் மோதல்களும்தான் வாழ்க்கையின் சோகம்.

சுய பார்வையும் சுய இயக்கமும் மழுங்கடிக்கப்பட்டு, நாம் உருவாக்கிய ஓர் அமைப்பில் நாமே கைதிகளாகப் போயிருக்கிறோம் இன்று: வெவ்வேறு 'வேடங்களி'ன் கைதிகள். அரசியல் தலைவர்கள், ஒரு mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். ஸெக்ரடரியட்டிலும் பிற இடங்களிலும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், 'நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?' என்கிற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவுஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமாக, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில 'தியரி' களை உச்சாடனம் செய்துகொண்டு, 'உஞ்ச விருத்தி' செய்கிற ஒரு பிராமண பிம்பத்தின் கைதிகள் (விசுவத்தின் 'எகாலஜி' ஈடுபாடுகூட, ஒரு கோணத்தில், அதிநாகரிகமான ஒரு பிம்பத்தை அணியும் முயற்சிதான்). பெண்கள், ஆணின் 'அடிமை', 'மகிழ்வூட்டும் கருவி' - அல்லது இந்தப் பிம்பங்களுக்கெதிராகப் 'புரட்சி' செய்கிறவள் - என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், 'வேடங்கள்' அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு gerontocratic அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityன், ஒரு alienationன் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே காகித மலர்கள் அறிமுகம் செய்கிறது.

'அப்படியானால் விடை என்ன?' என்று ஒருவர் கேட்டார். கணேசன் ஓரிடத்தில் சொல்வதுபோல, 'அமைப்பை இடித்துத் தரைமட்டமாக்'குவதா? இல்லை; ஓர் அமைப்புப் போனால் அதன் இடத்தில் இன்னொரு அமைப்பு, அதன் உச்சியில் இன்னொரு oligarchy வரும். கணேசன் அவ்வாறு நினைப்பதில் அவனுடைய 'தான்' - தனக்கு அதிகச் சலுகைகளும் வாய்ப்புகளும் கிடைக்க ஓர் அமைப்பை யாசிக்கும் 'தான்' - வெளிப்படுகிறது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிகழவேண்டுவது உண்மையில் மன மாற்றந்தான்: நாம் ஒவ்வொருவரும் ஒரு மொத்த அமைப்பின் பங்குதாரர் என்ற உணர்வின் அடிப்படையில், நம் 'தானை' அடிக்கடி பரிசீலித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ளத் தயாராதல்.

இயற்கையின் நியதிகளை உணருதலையும், அவற்றைப் பேணுதலையுமே இந்நாவல் ஒரு முக்கிய அடிச்சரடாகக் கொண்டிருப்பதால், இயற்கை வர்ணனைகளை - அவை இலக்கியப் பரிணாம நோக்கில் சற்றே பழைமையானவையென உணர்ந்தும் - நாவலில் ஆங்காங்கே அமைத்திருக்கிறேன். இதை என்னுடைய 'இலக்கிய வெகுளித்தனமாக'ச் சிலர் நினைப்பதை நான் அறியாமலில்லை. இலக்கியப் பரிணாமம், புதிய மோஸ்தர் என்ற பிரக்ஞை மட்டுமே ஓர் எழுத்தாளனிடம் தூக்கலாக அமைவது எழுத்தாளனுடைய 'தான்' அல்லது அகங்காரத்தின் பிரதிபலிப்பே அல்லவா? இந்த 'தான்' இங்கே வேண்டுமென்றே கைவிடப்பட்டிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கைவிடப்படலே நாவலின் கருப்பொருளுக்கு ஒரு சங்கேதமாக அமைவதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

திரு. பாக்கியமுத்து, இந்நாவலில் தம்மை மிகவும் கவர்ந்தது அதன் நேர்மை அல்லது 'உண்மைத் தொனி' என்றார். இதுதான் முக்கியம், இறுதியாக என்று எனக்கும் தோன்றுகிறது. என்னுடைய சார்பு பற்றிய ஒரு பிரகடனத்தை என்னிடமிருந்து வேண்டுகிறவர்கள், இதையே அப்பிரகடனமாகக் கொள்ளலாம்.
If you are not able to view this site , don't worry, you are not missing anything great. This contains my ramblings in , Thamizh (Tamil) , thats it.

My Profile | My Mailஅடிக்கடி மேய்வது
Mitran Foundation

Jambav - software for children with special needs


தமிழ் விக்சனரி

பரணை

நன்றி

தமிழ்மணம்
Blogger